முதலமைச்சர் உடல்நிலை குறித்து
அரசியல் தலைவர்கள் பேச உரிமை இல்லை
அ.தி.மு.க.
செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன்
முதலமைச்சர் ஜெயலலிதா நன்கு குணமடைந்து வருகிறார். விரைவில்
அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கிறோம். வீணாக பரப்பப்படும் வதந்திகளை யாரும்
நம்பவேண்டாம். லண்டனை சேர்ந்த டாக்டர் அவருடைய சிகிச்சையை தொடங்கியுள்ளார் என அ.தி.மு.க.
செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் மருத்துவமனைக்குள் சென்றுவிட்டு வெளியே
வந்து நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் மேலும் கூறியிருப்பதாவது:-
லண்டனை சேர்ந்த டாக்டர் அளித்து வரும் சிகிச்சை திருப்திகரமாக உள்ளது. சிகிச்சைபெறும் ஜெயலலிதாவை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக நான் அவரை சந்திக்கவில்லை’ என்றார்.
இதையடுத்து அவரிடம், ‘தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆஸ்பத்திரியில்
சிகிச்சைப் பெறும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தையோ, அல்லது ஆடியோவை வெளியிடவேண்டும்
என்று கூறியுள்ளாரே?’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘இந்த கோரிக்கையை வைப்பதற்கு கருணாநிதிக்கு
எந்த உரிமையும் கிடையாது. முதலமைச்சரின் உடல்நிலை குறித்து டாக்டர்களால் மட்டுமே கருத்து
கூறமுடியும். டாக்டர்களும் அவ்வப்போது ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் உடல்நிலை குறித்து அரசியல் கட்சித்தலைவர்கள் பேசுவதற்கு உரிமை இல்லை’ என்றார்.
அ.தி.மு.க.வின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி
நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் ஜெயலலிதா பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறார். நன்றாக பேசுகிறார். அரசு அலுவல் பணிகளை அன்றாடம் கவனித்து வருகிறார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றாலும் எந்த நேரமும் மக்களைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறார். ஆரோக்கியமாக இருக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி சமூக வலைதளங்களில் தேவை இல்லாமல் வதந்திகளை பரப்புவது தவறானது ஆகும்.
அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகமே முதல்-அமைச்சர் ஜெயலலிதா நன்றாக இருப்பதாக அறிவித்த பிறகும் மக்களை குழப்பும் வகையிலும், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் சிலர் வதந்திகளை பரப்புவது வேதனையாக உள்ளது. இதை நிறுத்திக்கொள்ளவேண்டும். அவர், டாக்டர்களின் அறிவுரையின்படி ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தொடர்ந்து 10 நாட்களாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருவதால், அவருடைய உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அறிந்துகொள்வதற்காக அன்றாடம் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
ஜெயலலிதா உடல்நிலை குறித்து தேவையற்ற வதந்திகள் சமூக வலைதளங்கள் மூலம் அவ்வப்போது பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு கிளம்பும் வீண் வதந்திகள் அ.தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டரையும் கவலையடையச்செய்கிறது. வீண் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். ஜெயலலிதா நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தரப்பில் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருகிறது.
.
0 comments:
Post a Comment