ஜெயலலிதா உடல்நிலை பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்
தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு



தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலைப்பற்றி எதிர்வரும் 6 ஆம்  திகதிக்குள் தமிழக அரசு உரிய விவரங்களை அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 22 ஆம் திகதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து டாக்டர்கள் வர வழைக்கப்பட்டுள்ளனர்.

அவருக்கு என்ன நோய்? என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஏன் என்றால், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆஸ்பத்திரி அறையில் வைத்து முதலமைச்சர் ஆலோசனை செய்வதாக பத்திரிகைகளுக்கு செய்தி குறிப்புகள் வழங்கப்படுகின்றன.

முதலமைச்சர் உடல் நலம் குறித்து அவ்வப்போது வதந்திகளும் பரவிக்கொண்டே இருக்கிறது. இதனால், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெளியூருக்கும், வெளியிலும் செல்ல முடியாமல் பலர் தவிக்கின்றனர். முதலமைச்சரின் உடல் நலம் குறித்து பரவும் வதந்திகளால் பொது அமைதிக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அவ்வப்போது, முதலமைச்சர் நன்றாக இருக்கிறார் என்று செய்திக் குறிப்பை மட்டும் வெளியிட்டு வருகிறது. புகைப்படம், வீடியோ ஆதாரங்களை வெளியிடுவதில்லை. இதனால் வதந்திகள் பரவி பொதுச்சொத்துக்களும் சேதப்படுத்தப்படுகிறது.

கடந்த1 ஆம் திகதி தமிழக கவர்னர், தலைமை செயலாளர் உள்ளிட்டோருக்கு ஒரு மனுவை அனுப்பினேன். அதில், தமிழக முதலமைச்சர், அமைச்சர், அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட வேண்டும்.

பொதுமக்களின் நலன் கருதி, முதலமைச்சரின் உடல் நலம் குறித்த உண்மை நிலையை அறிக்கையாக வெளியிடவேண்டும் என்று கூறியிருந்தேன். இந்த மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

அதேபோல, முதலமைச்சர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் எல்லாம் முடங்கி விட்டன. அவர் உடல் நலம் சரியாகும் வரை, இடைக்கால முதலமைச்சர் ஒருவரை நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள் ஜெயலலிதா உடல் நிலை பற்றி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.


இது தொடர்பாக அவர்கள் பிறப்பித்த உத்தரவில் முதலமைச்சரின் உடல் நிலைப்பற்றி எதிர்வரும் 6 ஆம்  திகதிக்குள் தமிழக அரசு உரிய விவரங்களை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top