ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நிழல் ஷீலா பாலகிருஷ்ணன்!

யார் இந்த ஷீலா பாலகிருஷ்ணன்?



ஒட்டுமொத்த தமிழகமும் அப்போலா மருத்துவமனையை நோக்கியுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை அறிந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்னை வந்து, அப்போலோ வாசல் வரை சென்று வருகிறார்கள். மருத்துவமனைக்குள் சென்று வரும் அ.தி.மு.க நிர்வாகிகள், அமைச்சர்களிடம், "அம்மாவின் உடல் நிலை இப்போது எப்படி உள்ளது? மருத்துவமனையில் இருந்து எப்போது வீடு திரும்புவார்கள்?" என்று கேட்கிறார்கள்.

பின்னர் ஒருவழியாக திருப்தி அடைந்தவர்களாக திரும்பிச் செல்கிறார்கள். தாங்கள் அறிந்ததை, தங்களுக்குத் தெரிந்தவர்கள், குடும்பத்தினர் என்றெல்லாம் செல்பேசியில் தெரிவித்து, திருப்தியடைகிறார்கள்.

இதுஒருபுறமிருக்க, முதலமைச்சரின் உடல்நிலை குறித்து டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், முதல்வரின் உடல்நிலை குறித்து 2 நாட்களில் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஒரு மாநில முதலமைச்சருக்கு என்ன நேர்ந்தது என்ற விவரத்தை வெளியிட  வேண்டும். இது முக்கியமான பிரச்னை என்பதே மனுதாரரின் கோரிக்கை.

அடுத்ததாக, முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் முதலமைச்சரின் அறைக்கு அருகிலேயே தங்கி இருந்து, அரசு நிர்வாகத்தை கவனிப்பவர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஷீலா பாலகிருஷ்ணன் தான்.

யார் இந்த ஷீலா பாலகிருஷ்ணன்?

1976-ம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷீலா பாலகிருஷ்ணன், தமிழகத்தின் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகித்தார், முதல்வர் ஜெயலலிதாவின் செயலாளராக 2002-ம் ஆண்டு பணியமர்த்தப்பட்டார். அவரது திறமை, செயல்பாடுகளால் அப்போதே ஜெயலலிதாவின் நற்பெயர் பட்டியலில் இடம்பிடித்தார். 2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஓரங்கட்டப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணன், மீண்டும் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயலகத்தில் முக்கியத்துவம் பெற்று2012-ம் ஆண்டு தலைமைச் செயலாளரானார்.

அப்போலோ மருத்துவமனைக்கு அன்றாடம் செல்லும் அமைச்சர்கள், முதல்வர் அம்மாவின் உடல்நிலையை அறிந்து கொள்வதுடன், அன்றாடம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த அறிவுறுத்தலையும் ஷீலா பாலகிருஷ்ணனிடம் இருந்தே பெற்று வருகிறார்கள். இதனை அரசு உயர் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

ஷீலா பாலகிருஷ்ணன் அரசு நிர்வாகத்தை நடத்துவது இது புதிதல்ல. ஏற்கெனவே கடந்த 2014-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களுரு தனி நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா பதவி இழக்க நேரிட்டபோது, ஓ. பன்னீர் செல்வம் 2-வது முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்றார். பெயரளவுக்குத் தான் பன்னீர் செல்வம் முதலமைச்சராக இருந்தாரே தவிர, முதல்வர் ஜெயலலிதா பதவியில் இல்லாத நேரத்தில், பன்னீர் செல்வம் எந்தவொரு கொள்கைமுடிவையும் எடுக்கவில்லை. அரசு நிர்வாகத்தை வழிநடத்தியது அப்போதும் இதே ஷீலா பாலகிருஷ்ணன்தான். இதனை ஓ பன்னீர் செல்வமே தனது நெருங்கிய சகாக்களிடம் தெரிவித்து அங்கலாய்த்தது உண்டு என்பதை அந்த அதிகாரி சுட்டிக்காட்டுகிறார்
1976-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட ஷீலா பாலகிருஷ்ணன், கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஓய்வு பெற்றபோது, அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்க முடியாதபடி அப்போது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டதால், நடத்தை விதிகள் அமலில் இருந்தன. இதனால், தமிழக அரசின் ஆலோசகராக, அதாவது முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனி ஆலோசகராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அதுமுதல் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், முதல்வர் பங்கேற்கும் அனைத்து விழாக்களிலும் ஜெயலலிதாவின் நிழல் போல இருப்பவர் ஷீலா பாலகிருஷ்ணன். கடந்த மே மாதம் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமிழக அரசின் ஆலோசகராகவே தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எந்தவொரு முடிவானாலும், அப்போலோவில் ஷீலா பாலகிருஷ்ணனின் கருத்து கேட்கப்பட்ட பிறகே எடுக்கப்படுகிறது. அது தலைமைச் செயலாளர் ராமமோகன ராவே ஆனாலும், ஷீலாவின் கூற்றுப்படியே சகலமும் செயல்படுகிறது. அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்பட அனைத்து அதிகாரிகளுமே முன்னாள் தலைமைச் செயலாளர் இந்நாள் அரசு ஆலோசகரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டே நடக்கின்றனர். ஷீலா பாலகிருஷ்ணனின் உத்தரவுகளை, தலைமைச் செயலகத்தில் இருந்து செயல்படுத்துபவர், முதல்வரின் முதன்மைச் செயலாளரான மற்றொரு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சாந்தஷீலா நாயர்.

அரசு நிர்வாகத்தின் நிழல் என்பதை விடவும், முதல்வரின் நிழல் போல செயல்படுகிறார் ஷீலா பாலகிருஷ்ணன்.
2012-ம் ஆண்டு அப்போதைய தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி பணி ஓய்வு பெற்றபோது, தனது கணவரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான பாலகிருஷ்ணனை பணி மூப்பில் பின்னுக்குத் தள்ளி, தலைமைச் செயலாளர் பதவிக்கு அறிவிக்கப்பட்டார். லட்சுமி பிரானேஷ், மாலதி ஆகியோருக்குப் பின்னர், தமிழகத்தின் மூன்றாவது பெண் தலைமைச் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றார். 2014-ல் ஓய்வு பெற்ற பின்னர் தற்போது வரை தமிழக அரசின் ஆலோசகராக இருந்து வருகிறார்.

நன்றி; விகடன்


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top