தமிழக முதல்வருக்காக லண்டனிலிருந்து வந்த புது டாக்டர்



தமிழக முதல்வர் ஜெயலலிதா 14 நாட்களைக் கடந்து அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 'லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டைத் தொடர்ந்து, நேற்று மற்றொரு லண்டன் மருத்துவர் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்' என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து நேற்று அறிக்கை வெளியிட்ட அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், ‘முதல்வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகள், முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் உடல் நலத்தை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளதுஎனத் தெரிவித்திருந்தது.
முதல்வர் உடல்நிலை பற்றி அப்போலோ மருத்துவமனை வெளியிடும் தகவல்கள் மட்டுமே தொண்டர்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும், முதல்வர் உடல்நிலை குறித்த வதந்திகள் வேகமெடுத்து வருகின்றன.

"மூச்சுத் திணறல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டார் முதல்வர். தற்போது செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நுரையீரல் தொற்றை சரிப்படுத்துவதற்கான சிகிச்சைகள் நடந்து கொண்டிருக்கின்றன. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயலின் சிகிச்சைகள் நோய்த் தொற்றின் பாதிப்பைக் குறைத்து வருகிறது. தொடர் மருந்துகளின் விளைவாக, நேற்று முதல்வரின் கை, கால்களில் இயக்கத்தில் பெரும் அசௌகரியம் ஏற்பட்டது. அதைக் கட்டுப்படுத்தத் தேவையான சிகிச்சைகளும் வழங்கப்பட்டன" என விளக்கிய கார்டன் ஊழியர் ஒருவர், "அப்போலோ மருத்துவமனையிலேயே தேவையான சிகிச்சை வசதிகள் இருக்கிறது. 'இந்த வசதிகளே போதும். வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை' என ரிச்சர்ட் தெரிவித்தார். நுரையீரல் தொற்றுக்கான சிறப்பு சிகிச்சை முறைகளை வழங்கி வந்தார். அவருடைய மேற்பார்வையிலேயே அப்போலோ மருத்துவர்கள் செயல்பட்டு வருகின்றனர்!’’ என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், லண்டனில் நடைபெறும் முக்கியமான மருத்துவ மாநாட்டுக்கு வருமாறு ரிச்சர்ட் பெயலுக்கு அழைப்பு வந்தது. மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்ததால், மூன்று நாள் பயணமாக லண்டன் சென்றுவிட்டார். அவருடைய இடத்தில், முதல்வரை கவனித்துக் கொள்ள சிறப்பு மருத்துவர் ஒருவர் லண்டனில் இருந்து வந்திருக்கிறார். ரிச்சர்ட் போலவே, நுரையீரல் தொடர்பான சிகிச்சையில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர். அப்போலோ மருத்துவர் குழுவுக்குத் தேவைப்படும் அறிவுரைகளை லண்டனில் இருந்தபடியே வழங்கிக் கொண்டிருக்கிறார் ரிச்சர்ட். இவர்களின் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை காரணமாக முதல்வரின் உடல்நிலையில் விரைவில் முன்னேற்றம் இருக்கும் என்று நம்புகிறோம்!’’ என கார்டன் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top