கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் தற்காலிக அதிபர்

கிழக்கு மாகாண சபையால் முறைப்படி

இன்னமும் விடுவிக்கப்படவில்லை

                                 – கிழக்குக் கல்வியமைச்சின் பதில் செயலாளர்

(அஸ்லம்)

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் தற்காலிக அதிபராகக் கடமையாற்றும் கிழக்கு மாகாண சபைக்குரிய இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர் திரு. பீ.எம்.எம்.பதுர்தீன் என்பவர் கிழக்கு மாகாண நிருவாகத்தால் இன்னமும் நிரந்தர அதிபர் நியமனத்தைப் பெற்றுக்கொள்வதற்காக விடுவிக்கப்படவில்லை என கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின் பதில் செயலாளர் திரு. தெய்வேந்திரன் இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கத்திற்கு அறிவித்துள்ளதாக அதன் செயலாளர் .எல்.எம்.முக்தார் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண வலயக்கல்வி அலுவலகங்கள், கோட்டக்கல்வி அலுவலகங்கள் என்பவற்றில் கடமையாற்றுவதற்கென 172ற்கு மேற்பட்ட இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்கள் தேவையாக உள்ள நிலையில் ஒருவரைத்தானும் கிழக்கு மாகாண ஆளுனர், கிழக்கு மாகாணப்பொதுச்சேவை ஆணைக்குழு என்பன விடுவிக்கமாட்டாது என திரு.தெய்வேந்திரன் மேலும் தெரிவித்தார். பதில் உத்தியோகத்தர் ஒருவர் மத்திய கல்வி அமைச்சினால் வழங்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தரை விடுவிப்பது பற்றி கவனத்திற் கொள்ளப்படும்.

கல்முனை ஸாஹிறாக்கல்லூரி தற்காலிக அதிபரை மீளவும் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்கு கடமைக்கு திரும்ப வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயத்தில் 06.12.2016ம் திகதி நடைபெற்ற விசாரணையின் போது கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சு ஏற்றுக்கொண்டது. இதற்கமைய அவரைக்கடமைக்கு அறிக்கை செய்யுமாறு கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் கடிதம் அனுப்பிய போதும் அவர் கடமைக்கு அறிக்கை செய்யாததன் காரணமாக கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சு கடந்த 13.02.2017ம் திகதி அவரை உடனடியாக கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்கு அறிக்கை செய்யுமாறு பணித்ததாக பதில் செயலாளர் திரு. தெய்வேநதிரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட மேற்படி உத்தியோகத்தர் அமைச்சின் கடிதத்திற்கு மதிப்பளிக்காது கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்கு அறிக்கை செய்யவில்லை. மாறாக 22.02.2017ம் திகதி கல்வியமைச்சுக்கும், மாகாணக்கல்வித் திணைக்களத்திற்கும் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் சிலரும், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் எனக்கூறும் ஒருவரும் சமூகமளித்து திரு. பதுர்தீனை மார்ச் மாதம் 31ம் திகதிவரை கடமையிலிருக்க அனுமதிக்கமாறு கேட்டுக்கொண்டு ஒரு கடிதத்தை வழங்கினர். அதற்கமைய கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சு இவர்களது கோரிக்கை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கையொன்றை விடுத்தது. இக்கோரிக்கை தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு சாதகமான எவ்விதமான பதிலையும் வழங்கவில்லை என திரு. தெய்வேந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளரும், மாகாணக்கல்விப் பணிப்பாளரும் வெளிநாட்டுக்குப் புறப்படவிருந்த சமயத்தில் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்து திரு. பதுர்தீனை விடுவித்துத் தருமாறு கேட்டுள்ளனர். இவ்விண்ணப்பம் சிபாரிசு செய்யப்பட்ட போதும் அது மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கோ, கௌரவ ஆளுனரின் அனுமதிக்கோ இதுவரை சமர்ப்பிக்கப்படாத நிலையில் திரு. பதுர்தீன் ஓய்வுபெறும் வரை கல்முனை சாஹிறாக்கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என வதந்தியொன்றைப் பரப்பி சாய்ந்தமருது மக்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் தவறான கருத்தொன்றை அரசாங்க சேவையின் நடைமுறை விதிகளை அறிந்து கொள்ளாத கூட்டமொன்று பொய்யைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று பாடசாலைகளை கட்டிட ஒப்பந்தக்காரர்களும், அரசியல்வாதிகளின் அடிவருடிகளும் தங்களுக்கு ஏற்றவிதமாக நிருவகிப்பதற்கும் தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான அதிபர்களைப் பெற்றுக் கொள்வதிலும் முனைப்புக்காட்டி வருவதன் வெளிப்பாடே பழைய மாணவர் அல்லாத ஒருவரை சாஹிறாக்கல்லூரியின் அதிபராகக் வைத்துக்கொள்வதற்கு முற்படுகின்றமையாகும்.
பொதுவாக பாடசாலையில் அன்பு செலுத்தாத, கடமைக்காக, பணத்துக்காக கடமையாற்ற முற்படும் அதிபர்கள் மூலம் சாஹிறா போன்ற பெரிய பாடசாலைகள் கல்வியில் முன்னேற்றமடைய முடியாது. தற்காலிக அதிபரான திரு. பதுர்தீனின் கிராமத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அதிபர்களாக சாஹிறா அமைந்துள்ள பிரதேச அதிபர்களை  அதிபர்களாகக் கடமையாற்ற பதுர்தீனின் கிராமத்து ஊர்ப்பெரியவர்களும், கல்விமான்களும், பழைய மாணவர்களும் அனுமதிப்பார்களா? அதற்கான உதவிகளை வழங்குவார்களா? என்பதனை உணர்ந்து கொள்ளாத நிலையில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் தற்போதைய பழைய மாணவர் சங்க நிருவாகிகளும், பாடசாலை அபிவிருத்தி சபையினரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என அப்பாடசாலையின் முன்னாள் பழைய மாணவர் சங்கச் செயலாளரும், முன்னாள் பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளரும், பிரதி வலயக்கல்விப் பணிப்பாளருமான ஜனாப். முக்தார் தெரிவித்தார்.
நிலைமை இவ்வாறிருக்க சாஹிறாக்கல்லூரி தற்காலிக அதிபருக்கு நிரந்தர அதிபர் நியமனம் எடுத்து விட்டோம் எனவும் அவர் ஓய்வு பெறும் வரை கடமையாற்ற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவ்தது அவரை நிரந்தரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் கூக்குரலிடுவது அவர்கள் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்வதற்கு சமனாகும்.
கடிதங்கள் இணைக்கப்பட்டுள்ளன.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top