கல்முனை மாநகர மக்களின்

அனைத்து தேவைகளும் பூர்த்தி!

மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில்!!

கல்முனை தொகுதி மக்களின் அபிவிருத்தி தேவைகள் பூர்த்தியாக்கப்பட்டு இன்றோடு பதினாறு வருடங்கள் நிறைவடைந்த நிகழ்வையொட்டி நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இன்று கல்முனை மாநகரம் பல அபிவிருத்திகளை அடைந்து, இலங்கையின் தலைசிறந்த மாநகரமாக மிளிர்வதை கண்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றார்கள்...
அந்த சேவைகள் பல...
 அதில் சில... கல்முனை மாநகர சபை கட்டிடம் பல கோடி ரூபா செலவு செய்து கட்டப்பட்டுள்ளது. இன்று இலங்கையின் இரண்டாவது மாநகரசபை கட்டிடம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.
திண்மக்கழிவு அகற்றும் விடயத்தில், இலங்கையில் இம்மாநகர சபை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
கல்முனை தொகுதியில் உள்ள அத்தனை ஊர்களின் உள்ளூர் வீதிகள் அனைத்தும் போடப்பட்டு பூர்த்தியாக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு அந்த வீதிகளின் இரண்டாம் கட்ட திருத்த வேலைகள் நடைபெற்றும் வருகின்றது என்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.....
அஸ்ரப் ஆஸ்பத்திரிக்கு 25கோடி ரூபா பணம் ஒதுக்கப்பட்டு வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த பணம் வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு செல்லவிருந்த போது, அதனை மு.கா தலைவர் அவர்கள் தலையிட்டு தடுத்ததால் மக்களால் சிலாகித்து பேசப்படுகின்றார்கள்.
அதே நேரம் கல்முனை மாநகரில் மிக நீண்ட காலமாக இயங்கிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை இனவாதிகள் இடமாற்ற முயற்ற முயற்சித்த போது எங்கள் தொகுதி எம்.பி அவர்கள் களத்தில் நின்று தடுத்த விதம் கல்முனை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது...
கல்முனையில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்தை பார்த்து செல்வதற்கு வெளியூர் மக்கள் முந்தியடிப்பதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது.
கல்முனை நகரமண்டபம் அபிவிருத்தி செய்யப்பட்டு பிரமாண்டமான வைபவங்கள் நடைபெறுவதைப் பார்த்து மக்கள் பூரிப்படைந்திருப்பதை காணக்கூடியதாகவும் உள்ளது.
 கல்முனை மாநகரின் சந்தை கட்டிடத்தை பார்த்து ஆச்சரியப்பட்டகுருநாகல் மாநகர சபை மேயர் இதே போன்று நாங்களும் அமைக்க வேண்டும் என்று கூறியது கல்முனை மக்களை புல்லரிக்க வைத்துவிட்டது.
 கல்முனையின் நீதிமன்ற கட்டிட தொகுதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதை கண்டு இன்றைய தலைமை நீதிபதி கண்கலங்கியதை பார்த்து, மக்கள் வியப்படைந்தனர்.
கல்முனை மாநகரில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில், மக்கள் பொழுதை கழிப்பதற்கு திரண்டு வருவதை கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் தினறுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.
கல்முனை பஸ் நிலையம் 24மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்குகின்றது. அங்கே பிரயாணிகள் தமது இயற்கை தேவைகளை பூர்த்திசெய்து கொள்ள நான்கு நவீன மலசல கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 கல்முனை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள மைதானத்தில் நடந்த ஒரு கிரிக்ககெட் போட்டியை கண்டுகளிக்க வந்த "சனத் ஜெயசூரிய" அவர்கள் இந்த மைதானத்தை பார்த்து பாராட்டினார். இப்போது இரண்டாம் கட்ட நடவடிககையாக மின்னொளி அமைக்கும் திட்டமும் நடந்துவருகின்றது. அடுத்த உலக கிண்ண போட்டியை நடத்தலாம் என்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
கல்முனை நகர் பல அபிவிருத்தியை பெற்று இளங்குவதனால் இரவு பதினொரு மணிவரையும் மக்களின் நடமாற்றத்தை கல்முனை மாநகரில் காணக்கூடியதாகவுள்ளது.
 பல பாடசாலைகளில், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சேவைகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் கம்பீரத்தோற்றத்தை கண்டாலே மக்கள் மதிமயங்கி போகின்றார்கள். இதனால் இந்த பாடசாலைக்கு இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் கல்வி கற்பதற்காக மாணவர்கள் முந்தியடிப்பதை பார்த்து பெருமை பட வேண்டியுள்ளது.
இப்படி பல அபிவிருத்திகளை கல்முனை பெற்றாலும், பக்கத்து ஊரான சாய்ந்தமருதும் பல அபிவிருத்தியை பெற்று இளங்குகின்றது. பல கோடி ரூபாய் செலவில் தோணா அபிவிருத்தி, கடல் கரையோரத்தில் அமைந்துள்ள, பூந்தோட்டம், சாய்ந்தருது வைத்தியசாலை சகல வசதிகளுடன் தலைநிமிர்ந்து நிற்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
சாய்ந்த மருது மக்கள் இந்தசேவைகளில் மயங்கியதன் காரணமாக, இனி எங்களுக்கு தனியான பிரதேச சபை வேண்டாம் என்று கூறுவதையும் அவதானிக்க கூடியதாகவுள்ளது.
அதே போன்று மருதமுனை மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்களின் வாழ்வாதாரமான கைத்தறிக்கு உற்பத்திகளுக்கு உலக நாட்டில் சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுத்ததனால் அவர்கள் மற்றில்லா மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.
மேலும், இப்பிரதேசங்களிலுள்ள அனைவருக்கும் தண்ணீர் தேவை பரிபூர்ணமாக பூர்த்தியாக்கப்பட்டதை இட்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றார்கள்.
மட்டுமல்லாது, நற்பட்டிமுனை மக்களுக்கு சகல தேவைகளும் பூர்த்தியாக்கப்பட்டு, எந்த அளவுக்கு என்றால், இனி அபிவிருத்தியே வேண்டாம் என்று அந்த மக்கள் கூறுமளவுக்கு நற்பட்டிமுனை பகுதியில் அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்துள்ளது...
இதற்குமேல் இனி எங்களுக்கு என்ன வேண்டும். தொழில் வாய்ப்பை பொறுத்தவரையில் 90 வீதமானவர்கள் பதவிகள் பெற்று உள்ளார்கள். இதற்கெல்லாம் காரணமான மு.கா.தலைவரும், இந்த தொகுதியின் எம்.பியும்தான் என்பதை இந்த உலகமே அறியும்.... ஆனால் அரசியல் எதிரிகள் இப்படி ஒன்றும் கல்முனை மாநகரில்  நடக்கவில்லை என்று கூறுவதாக, மக்கள் அறிந்து ஆத்திரத்தோடு உள்ளதையும் நாங்கள் அறியக்கூடியதாக உள்ளது... நன்றி....கல்முனை மக்களுக்கு.....
(யாவும் கற்பனை..........)
எம்.எச்.எம்.இப்ராஹிம்..... கல்முனை..... 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top