ஏறாவூர் இரட்டைப் படுகொலை;
6 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு­-----

பட்டமளிப்புக்கு சமூகமளிக்குமாறு

பல்கலைக் கழகத்திலிருந்து வந்த அழைப்புக் கடிதத்தைப்

பெற்றுக் கொண்டதும் கதறி அழுத கணவர்

கடந்த வருடம் செப்ரெம்பெர் மாதம் மட்டக்களப்பு ஏறாவூரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தாய், மகள் இரட்டைப் படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்டவரான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) என்பரை பட்டமளிப்புக்கு சமூகமளிக்குமாறு கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து வந்த அழைப்புக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டதும் தான் கதறி அழுததாக கணவர் மாஹிர் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் கடந்த செப்ரெம்பெர் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இன்று (08) படுகொலைச் சந்தேக நபர்கள் மீண்டும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டவரான ஜெனீராபானுவின் பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் 08.04.2017 அன்று இடம்பெறவுள்ளது.

கலைப்பட்டதாரியாக பட்டம் பெறவுள்ள தனது மனைவிக்குரிய கடிதம் மட்டும் தன் கைவசம் கிடைத்த போது மனைவியைக் கொன்றொழித்து விட்டார்களே என்றும் கணவன் எம்..எம். மாஹிர் கதறினார்.

மனைவி படுகொலை செய்யப்பட்டிருக்கும் வேளையில் தனது கைக்குக் கிடைத்த பட்டமளிப்புக் கடிதத்தை எந்த முகவரிக்கு அனுப்புவேன் என்று கணவர் மாஹிர் முகநூலில் கவிதையொன்றை உருக்கமாக எழுதியுள்ளார்.

சர்வதேச பெண்கள் தினமான இன்று 08-03-2017 உன்னையும் உன் தாயையும் கொன்றொழித்த சந்தேக நபர்களுக்கான வழக்காம்.

08-04-2017 அன்று உனக்கு கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பட்டதாரியாக பட்டம் சூட்டப் போகின்றார்களாம்.

உன் அன்புக் கணவனாகிய எனக்கு மனசு கனக்கிறது. வார்த்தைகள் பஞ்சமாகிறது. இது உனக்கு வந்த கடிதம்.

முகவரி தெரியவில்லை எனக்கு, உனக்கு வந்த கடிதத்தை எங்கே அனுப்புவதென்று

விழித்திருந்து பரீட்சை எழுதி எதிர்பார்த்திருந்தவள் நீ.

இந்நிகழ்வுக்கு யார் யார் போவதென்று அன்றே தெரிவு செய்து மகிழ்ந்தவள் நீ.

கறுப்பு மேலங்கி அணிந்து சான்றிதழ் பெறுவதை. கற்பனையில் எண்ணி சிறகடித்தவள் நீ.

படித்து பட்டம் பெற்றால் pயன வாங்கித்தருவீங்களா என்று சிறு பிள்ளையாய் என்னிடம் செல்லம் காட்டியது நீ.

ஒவ்வோரு பரீட்சைக்கும் ஆவலாய் இருந்த தாயை அழைத்துச் சென்று மனங்குளிரச் செய்தவள் நீ.

உன் ஆசை, கற்பனையெல்லாம் கைகூடும் தருணத்தில் இன்று முகவரி அற்றுப்போனாய் ! நான் என்ன செய்வேன்.?

நான் எப்படி தெரியப்படுத்துவேன் உனக்கு. உன் கப்ரின் தலைமாட்டில் வைக்கிறேன் இந்த கடிதத்தை. முடிந்தால் எடுத்துச் சென்று பட்டம் பெற்றுக் கொள், 08.04.2017 எதிர்பார்க்கிறேன் உன்னை.

இப்பொழுது கண்ணீரைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை எனக்கு.

என் துயரத்தை அறிவார்களா உன்னைக் கொன்று குவித்த துஷ்டர்கள்.?

யாஅல்லாஹ்! யா ரஹ்மானே! நீயே பெரியவன்.

இந்த பட்டத்தை விட பெரிய பட்டமான உன் பாதையில் மரணித்த உயர்ந்தவர்கள் என்ற உயரிய பட்டத்தைக் கொடுத்து விடு படுகொலை செய்யப்பட்ட என் மனைவிக்கும் அவரது தாய்க்கும்.’
என்று உள்ளத்தை உருக்கும்படியாக எழுதப்பட்டுள்ளது.
ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் 6 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 22ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் இன்று (8)  இச்சந்தேக நபர்களை ஆஜர்படுத்தியபோது, மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எம்..எம்.றிஸ்வி  இவர்களுக்கான விளக்கமறியலை நீடித்துள்ளார்

ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பின் ஒழுங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது பாஹிர் (வயது 24- கொல்லப்பட்ட பெண்ணின் கணவனுடைய சகோதரன்), அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த வசம்பு என்றழைக்கப்படும் உஸனார் முஹம்மது தில்ஷான் (வயது 29), பாடசாலை வீதி மீராகேணியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் அஹம்மது றாசிம் (வயது 23), பள்ளியடி வீதி, காவத்தமுனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது அஸ்ஹர் (வயது 23), ஏறாவூர் நகர் போக்கர் வீதியைச் சேர்ந்த இஸ்மாயில் சப்ரின் (வயது 30), மற்றும் ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது பிலால் (வயது 50) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.

ஏறாவூர், முகாந்திரம் வீதியை அண்டி அமைந்துள்ள தங்களின் வீட்டில் வசித்துவந்த தாயான  நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள்  கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி மீட்கப்பட்;டிருந்தன .


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top