மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிவு

பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு

மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் 6 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்த அனர்த்தத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான விபரங்களை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு வெளியிட்டுள்ளது.
கொலன்னாவ பிரதேச செயலக பிரிவில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தால் 228 குடும்பங்களைச் சேர்ந்த 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
980 பேரில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேலும், 30 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
79 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், 17 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
26 குடும்பங்களைச் சேர்ந்த 129 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
30 பேர் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என்றும் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இவ்வனர்த்தத்தில் காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட 13 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 மீட்புப் பணிகளின் பொருட்டு இராணுவம் உள்ளிட்ட முப்படையினர், பொலிசார், பொதுமக்கள், அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையத்தைச் சேர்ந்த ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 1,500 இற்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள், ஈடுபட்டுள்ளனர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top