கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில்

அமைதி பேண வந்த தற்காலிக அதிபர்

பாடசாலையை விட்டு வெளியேறும்போது

பாடசாலையில் குழப்பநிலையை ஏற்படுத்த முயற்சி

கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் சங்க செயலாளர் குற்றச்சாட்டு

(அஸ்லம்)



கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் 2013ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அசம்பாவிதம் ஒன்று தொடர்பாக அப்பாடசாலையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட இலங்கை கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த தற்காலிக அதிபர் பீ.எம்.எம்.பதுர்தீன் என்பவர் பாடசாலையை விட்டு விலகிச் செல்லும் போது அப்பாடசாலையினை குழப்பகரமான சூழ்நிலைக்கு ஆளாக்கிவிட்டுச் சென்றிருப்பதாக இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் சங்க செயலாளர் .எல்.எம்.முக்தார் தெரிவித்துள்ளார்.

குறித்த தற்காலிக அதிபர் மாகாண அரச சேவையிலிருந்து மத்திய அரச சேவைக்கு விடுவிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சு அவரை உடனடியாக கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் மீளவும் கடமையேற்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதுடன், அவர் கடமையேற்கும் வரை அவரது சம்பளத்தையும் இடைநிறுத்தி வைத்திருந்தது.

இதனையடுத்து கடந்த 03.04.2017ம் திகதியன்று கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் உதவிக்கல்விப் பணிப்பாளராக மீளவும் கடமையேற்றுக்கொண்ட அவர் 04.04.2017ம் திகதியன்று கல்முனை ஸாஹிறாக் கல்லூரிக்கு சமூகமளித்து பாடசாலை சம்பவத் திரட்டுப் புத்தகத்தில் அப்பாடசாலையின் பிரதி அதிபர்களான ஜனாப். எம்.எஸ்.முஹம்மட், ஜனாப். .முஜீன் ஆகிய இருவரிடமும் பாடசாலைப் பொறுப்புக்களை ஒப்படைப்பதாக எழுதிவிட்டு சென்றுள்ளார்.

வழமையாக ஒரு பாடசாலை அதிபர் பாடசாலையை விட்டு செல்லும்போது அங்குள்ள சிரேஸ்ட பிரதி அதிபர் அவ்வாறு பிரதி அதிபர் இல்லையாயின் சிரேஸ்ட ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வதுதான் பாடசாலை நிருவாக நடைமுறையாகும். குறித்த பதுர்தீன் இதற்கு மாற்றமாக புதுவகையான நடைமுறையைக் கையாண்டு பாடசாலையின் பிரதி அதிபர்களுக்கிடையே அதிகாரப் போட்டியொன்றை உருவாக்கி மீண்டும் ஒரு குழப்பகரமான நிலைக்கு பாடசாலையை உள்ளாக்கியுள்ளார் என மேற்படி செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவர் இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு நியமிக்கப்பட முன்னர் மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய்ற்றுந்தார். அங்கிருந்து அவர் பதவி உயர்வு பெற்றுச் சென்ற போது அப்பாடசாலையிலிருந்த ஒரு பிரதி அதிபரிடம் பாடசாலைப் பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு வெளியேறிய அவர் தனது சொந்த ஊரல்லாத வேறு பிரதேசப் பாடசாலை ஒன்றில் பாடசாலைப் பொறுப்புக்களை ஒப்படைக்கும் விடயத்தில் இவ்வாறான ஒரு சம்பவத் திரட்டுக் குறிப்பை ஏன் இட்டார் என்பது மர்மமாக உள்ளது.
இவ்வாறான ஒரு சம்பவத் திரட்டுக் குறிப்பையிட்டு பாடசாலையை குழப்பநிலைக்கு இட்டுச்செல்ல முயற்சித்த இவருக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாகாணக்கல்விப் பணிப்பாளரிடமும், மாகாணக்கல்விச் செயலாளரிடமும் தாம் கோரியுள்ளதாகவும் மேற்படி செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆயினும், புத்திசாலிகளான அவ்விரு பிரதி அதிபர்களிலும் சிரேஸ்ட பிரதி அதிபர் என்ற வகையில் பிரதி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் பாடசாலையைப் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top