கல்முனை ஸாஹிறாத் தேசிய பாடசாலையின்
சிரேஸ்ட பிரதி அதிபர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில்
தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாகத் தெரிவித்து முறைப்பாடு
(அஸ்லம்)
கல்முனை ஸாஹிறா கல்லூரியின் அதிபர் வெற்றிடத்திற்கு அப்பாடசாலையின் சிரேஸ்ட பிரதி அதிபரான தன்னை நியமிக்காது மாகாண அரச சேவையைச் சேர்ந்த ஒருவரை தற்காலிக அதிபராக நியமித்ததன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து அத்தேசிய பாடசாலையின் சிரேஸ்ட பிரதி அதிபர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.
கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் சிரேஸ்ட பிரதி அதிபரான இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்த எம்.எஸ்.முஹம்மட் என்பவரே மேற்படி முறைப்பாட்டைச் செய்துள்ளார். அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை கடந்த 2012ம் ஆண்டு மதல் நிரந்தர அதிபரின்றி இயங்கி வருகிறது. இறுதியாக இப்பாடசாலையில் தற்காலிகமாக கடமையாற்றியவர் ஓய்வுபெற்றுச் சென்றதன் பின்னர் மத்திய அரசு சேவையைச் சாராத மாகாண அரச சேவையைச் சேர்ந்த இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர் ஒருவர் பாடசாலையின் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டார்.
தற்போது மேற்படி தற்காலிக அதிபரை கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்கு கடமைக்காக அறிக்கை செய்யுமாறு கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பாடசாலை அதிபர் பதவி வெற்றிடமாகவுள்ளது.
இப்பாடசாலையை போன்று அதிபர் பதவி வெற்றிடமாக காணப்பட்ட கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் அதிபராக அப்பாடசாலையின் சிரேஸ்ட பிரதி அதிபராகக் கடமையாற்றும் இலங்கை அதிபர் சேவை இரண்டாம் வகுப்பைச் சேர்ந்த ஒருவரை கடந்த மாதம் மார்ச் 16 முதல் கல்வியமைச்சு தற்காலிக அதிபராக நியமித்துள்ளது.
இதே நடைமுறையை பின்பற்றி கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் சிரேஸ்ட பிரதி அதிபரான தன்னை அப்பாடசாலையின் அதிபராக நியமிக்குமாறும் மத்திய அரசு சேவையை சாராத வெளியார் ஒருவரை இப்பாடசாலையின் தற்காலிக அதிபராக நியமித்ததன் மூலம் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இம்முறைப்பாட்டை செய்துள்ளார்.
இம்முறைப்பாட்டில் கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளர், கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment