பொதுப்பரீட்சை அடைவுமட்டங்கள் அதிகரிக்கும்போது

அதற்கான பொறுப்பை தாம் ஏற்காது ஆசிரியர்களை கௌரவிக்கும்

        பக்குவம் வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கு வேண்டும் 

எஸ்.எஸ்.மனோகரன் தெரிவிப்பு

(அஸ்லம்)


பாடசாலை பொதுப்பரீட்சைகளான .பொ. சாதாரண தரம், உயர்தரம், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளில் மாணவர்கள் உயர் சித்திகளைப் பெற்று அடைவுமட்டம் அதிகரிக்கின்ற போது இதற்குக் காரணமாக ஆசிரியர் சமூகத்தை பாராட்டுகின்ற மனப்பக்குவத்தை கல்விப் பணிப்பாளர்கள் கொண்டிருத்தல் வேண்டும்.

இவ்வாறு வடக்கு, கிழக்கு முன்னாள் மேலதிக கல்விப் பணிப்பாளரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட கல்விப் பணிப்பாளருமான எஸ்.எஸ்.மனோகரன் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துக்கூறுகையில்,

அண்மைக்காலமாக பாடசாலை மட்ட பொதுப்பரீட்சை உயர்தரங்களுக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள ஒருசில வலயக்கல்விப் பணிப்பாளர்கள் தமது தமது முயற்சியால்தான் பெறுபேறுகள் அதிகரித்துள்ளதாகப் பிரச்சாரம் செய்வது குறித்து மூத்த கல்விப் பணிப்பாளர் என்ற வகையில் தாம் வெட்கமடைவதாகவும் உண்மையில் இப்பெருமைக்கு சொந்தக்காரர்கள் ஆசிரியர்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள ஏன் மறுக்கிறார்கள் என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது.

இன்று பாடசாலைகளுக்கு சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், பாட ரீதியான உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், இணைப்பாளர்கள் என பலர் கல்வி வலய மட்டத்தில் கடமையாற்றுகின்றனர். ஆனால் இவர்கள் தாம் நியமிக்கப்பட்ட நோக்கத்தை மறந்து செயற்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். வகுப்பறை மாதிரி கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. அதிகமான வலயக்கல்விப் பணிப்பாளர்கள் குழு மேற்பார்வையில் கலந்து கொள்வதில்லை. இது இன்றைய கல்வி நிருவாக உள்ளது.

ஆனால் 2000ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளை நாம் அவதானிக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனங்களில் பாரிய அநீதி இழைக்கப்படுகிறது. சேவை மூப்புக்கூடிய, தரம் கூடிய, அனுபவமுள்ள உத்தியோகத்தர்கள் இருக்கையில் கனிஸ்ட, அனுபவம் குறைந்த உத்தியோகத்தர்கள் வலயக்கல்விப் பணிப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக பலர் மன உளைச்சலுடன் கடமையாற்றுகின்றனர். இதனால் கிழக்கு மாகாணக்கல்வி பின்னடைவை கண்டு வருகிறது.

இவ்வாறான அனுபவம் குறைந்த சில வலயக்கல்விப் பணிப்பாளர்கள் தமது இருப்புக்களை தக்க வைப்பதற்காக மாணவர்கள் பொதுப்பரீட்சைகளில் அடையும் உயர் முடிவுகளை தமது முயற்சியால் கிடைத்த முடிவுகள் என காட்ட முனைகிறார்கள். இவ்வாறான எத்தனங்கள் கல்வி நிருவாகிகளுக்கு பொருத்தமற்றது என்பது எனது கருத்தாகும். இதனை நான் ஒரு மூத்த கல்வி நிருவாகி என்ற வகையில் ஆலோசனையாக கூற விரும்புகிறேன்.

பாடசாலை மட்டப்பரீட்சை முடிவுகளுக்கு முழு உரிமையாளர்கள் பாடசாலை ஆசிரியர்களாவர். பரீட்சை முடிவு திறமையாக அமைந்தால் தமது என உரிமை கொண்டாடுபவர்கள் பரீட்சை முடிவு மோசமாக அமைந்தால் அதனை தமது முடிவாக ஏன் ஏற்றுக்கொள்வதில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top