கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடயத்தில்

அக்கறையற்ற ஆளுனர்

(அபூ முஜாஹித்)

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் நடாத்தி வரும் அரச தொழிலொன்றை பெற்றுக்கொள்ளும் வகையிலான சாத்வீகப் போராட்டம் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுனர் அக்கறையற்றவர் போன்று இருப்பது குறித்து கிழக்கு மாகாண சிவில் சமூகப் பிரதிநிதிகளும், அரசியல்வாதிகளும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் காரைதீவிலும், மட்டக்களப்பு மாவட்டப்பட்டதாரிகள் மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரத்தடியிலும், திருகோணமலை மாவட்டப் பட்டதாரிகள் ஆளுனர் செயலகத்திற்கு முன்னாலும் கடந்த 50 நாட்களுக்கு மேலாகப் போராடி வருகின்றனர்.
இப்போராட்டம் நடாத்தும் வேலையற்ற பட்டதாரிகளுடன் ஒரு சுமுகமான பேச்சுவார்த்தை நடாத்துவதற்கோ அவர்களது பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் உயர் மட்டத்திற்கு தெரியப்படுத்துவதற்கோ விருப்பமற்ற நிலையில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ ஒரு அக்கறையற்றவராக இருப்பது குறித்து வேலையற்ற பட்டதாரிகள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுனர் கூடுதலான நாட்களை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் ஆலோசகராக இருப்பதிலேயே கவனம் செலுத்துகிறார். கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் இரு தினங்களில் அதாவது திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் மாத்திரம் செலவிடுகிறார். போராட்டம் நடைபெற்று வருவது ஆளுனர் செயலகத்திற்கு முன்னால் ஆகும். அதனைக்கடந்தே அவர் கடமைக்குச் செல்கிறார்.

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடயமாக அண்மையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதமரின் ஆலோசகரோடு தொடர்பு கொண்டு சில முயற்சிகளை எடுத்தமை தொடர்பாக தமது கடுமையான அதிருப்தியை கிழக்கு மாகாண ஆளுனர் வெளியிட்டதாகவும் தமது அனுசரணையின்றி பிரதமரின் ஆலோசகரை சந்தித்தமை தொடர்பாக அதிருப்தி அடைந்ததாகவும் தெரிய வருகிறது.
ஆனால், வட மாகாண ஆளுனர் வட மாகாண பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி அமைச்சுக்களுடனும், வேலையற்ற பட்டதாரிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top