ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின்

பழைய மாணவர்கள் ஒன்றுகூடல்

 [ எம்..முபாறக் ]

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் நூற்றாண்டை ஒட்டி பழைய மாணவர்களின் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 16 ஆம் திகதி பாடசாலையில் இடம்பெறவுள்ளது.நடை பவனி மற்றும் கலை நிகழ்வுகளுடன் இந்த ஒன்றுகூடல் சிறப்பிக்கப்படவிருக்கின்றது.
ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு மாபெரும் நடை பவனியுடன் இந்த நிகழ்வு ஆரம்பமாகின்றது. நடை பவனியானது பாடசாலையின் புன்னைக்குடா வீதி நுழைவாயிலில் ஆரம்பமாகி புண்ணக்குடா பிரதான வீதி வழியாக தற்போதைய பொதுச் சந்தை சந்தி வரை சென்று மணிக்கூட்டுக் கோபுரத்தை நோக்கித் திரும்பும்.
 அங்கிருந்து பிரதான  வழியினூடாக ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் வரைச் சென்று மீண்டும் அதே வழியால் திரும்பி பாடசாலையின் பிரதான வீதி நுழைவாயிலை வந்தடையும்.
 பேண்ட் வாத்திய குழுவானது பாடசாலையின் புன்னைக்குடா வீதி நுழைவாயிலில் இருந்து ஏறாவூர் அல்-ஜிப்ரியா பாடசாலை வரை செல்லும்.
 இதனைத் தொடர்ந்து மாலை ஏழு மணி முதல் இரவு 10 மணி வரை பழைய மாணவர் சங்கத்தின் எதிர்கால செயற் திட்ட அறிமுகமும் கலை நிகழ்வுகளும் இடம்பெறும்.அத்தோடு கல்வி மற்றும் விளையாட்டு போன்றவற்றில் பாடசாலை இதுவரை நிகழ்த்திய சாதனைகள் மீள நினைவுபடுத்தப்படும்.இராப் போசனத்துடன் நிகழ்வு நிறைவடையும்.
 இந்த நிகழ்வில் கிழக்கு முதலமைச்சர் நசீர் அஹமட்,பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி,நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா , முன்னாள் எம்பி பஷீர் சேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் ஆகியோர் பழைய மாணவர்கள் என்ற அடிப்படையில் கலந்து சிறப்பிப்பர்.இந்த நிகழ்வை நினைவுகூறும் வகையில் நினைவுப் படிகம் ஒன்றும் நட்டு வைக்கப்படும்.
இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிப்பதற்கு பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பழைய மாணவர்கள் சங்கம் அழைப்பு விடுக்கின்றது.
 இந்த நூற்றாண்டு நிகழ்வுக்கு முன்னோடியாக பழைய மாணவர்களுக்கிடையில் மாபெரும் கிரிக்கட் சுற்றுப் போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது.தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 1990 முதல் 2013 வரையான கல்வி பொது சாதாரண தர பழைய மாணவர்கள் 20 அணிகளாகக் கலந்துகொண்டனர்.

 அலிகார் பழைய மாணவர்கள் சங்கமானது கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.வெளிநாடுகளிலும் இதன் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.ஏறாவூரில் கல்வி அபிவிருத்தி தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கொழும்பிலும் வழிநாடுகளிலும் கிளைகள் அமைப்பதற்கு பழைய மாணவர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை 105 வயதை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top