விமல் வீரவன்சவுக்கு பிணை
91 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்சவை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
50,000 ரூபாய் ரொக்கப்பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல, கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, இன்று 7 ஆம் திகதி உத்தரவிட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த விமல் எம்.பி. அம்பியூலன்ஸில், நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டிருந்தார். தேசிய வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சராக இருந்த போது, 2011 - 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில், தனது அமைச்சுக்குக் கீழிருந்த, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட 40 வாகனங்களை தமது அரசியல் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தி, 91 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்ததாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்த அவர், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment