கல்முனை மாநகர சபையின் சோலை வரி மற்றும்

ஆதன வரி, வியாபார வரி என்பவற்றை அறவீடு செய்வதில்

கிராமத்திற்குக் கிராமம் பாரபட்சம்?

சாய்ந்தமருதுக்கு 10  வீதம் மருதமுனைக்கு 05 வீதம்
(அபூ முஜாஹித்)

கல்முனை  மாநகர சபை ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ள சோலைவரி, ஆதன வரி, வியாபார வரி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் சமச்சீரற்ற தன்மை காணப்படுவதாகவும், கிராமத்திற்கு கிராமம் வேறுபாடான முறையில் வரி வீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சாய்ந்தமருது பிரதேச வரி செலுத்துவோர் கவலை தெரிவிக்கின்றனர்.
கல்முனை மாநாகர சபையின் முகாமைத்துவ கமிட்டியின் ஒக்டோபர் 2016ம் திகதிய கூட்டத்தின் தீர்மானத்திற்கமைய 2017ம் ஆண்டு முதல் செல்லுபடியாகும் வகையிலான வரி வீதம் தொடர்பான வர்த்தமானி 23 டிசம்பர் 2016ம் திகதி 1999ம் இலக்க உள்ளுராட்சி வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய 1987ம் ஆண்டுக்கு முன் நடைமுறையில் இருந்த கல்முனை பட்டின சபை, கரைவாகு தெற்கு கிராம சபைசாய்ந்தமருது பிரதேசங்களுக்கான சோலை வரி, ஆதன வரி, வியாபார வரி என்பன கல்முனை மாநகர சபைக்கு 10 வீதம் செலுத்த வேண்டும்.
கரைவாகு வடக்கு கிராம சபைக்குட்பட்ட மருதமுனை, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு பிரதேசம் மற்றும் கரைவாகு மேற்கு கிராம சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு பிரதேச சோலை வரி, ஆதன வரி மற்றும் வியாபார வரியாக 05 வீதம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாநகர சபை எல்லைக்குள் வித்தியாசமான முறையில் பொதுமக்களிடமும், வர்த்தகர்களிடமும் பாகுபாடான முறையில் வரி அறவீட்டினை கல்முனை மாநகர நிருவாகம் அறவிடுவது பாரிய அநீதி என்பதுடன் வரி செலுத்துவோரின் அடிப்படை உரிமையை மீறும் செயற்பாடுமாகும்.
கல்முனை மாநகர சபையின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமது பதவிகளை இழந்த பின்னர் மிகவும் சூட்சுமமான முறையில் கல்முனை மாநகர ஆணையாளர் வரி விதிப்பை தமது சொந்த கிராமம் நன்மையடையக்கூடிய வகையிலும் ஏனைய கிராமங்கள் பாதிப்படையக்கூடிய வகையிலும் வரி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெயியிட்டுள்ளார் என சாய்ந்தமருது பிரதேச வரியிறுப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த பாரபட்சமான வரி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்பட வேண்டுமெனவும் இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வரியிறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top