ஆசிரியர்களின் போராட்டம் மற்றும் எதிர்ப்புக்களைத் தொடர்ந்து

மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளராகக் கடமை செய்த மன்சூர்


அக்கரைப்பற்றுக்கு இடமாற்றம்

(அபூ முஜாஹித்)

மூதூர் கல்வி வலய ஆசிரியர்களின் சுகவீன லீவுப்போராட்டம் மற்றும் ஒத்துழையாமை காரணமாக மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய எம்.கே.எம்.மன்சூர் அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய .எல்.எம்.காசீம் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளராக ஆளுனரின் பணிப்பிற்கமைய கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளரால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றக் கடிதங்களில் சில அசம்பாவிதங்கள் தொடர்பாக நடாத்தப்பட்ட விசாரணை முடிவின் சிபாரிசுக்கிணங்க இடமாற்றம் வழங்கப்படுவதாக கிழக்கு கல்வி அமைச்சு செயலாளரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூதூர் கல்வி வலய ஆசிரியர்களை மத நிந்தனை செய்வதாகவும், அவர்களை நையாண்டி செய்வதாகவும், அதிபர்களை மிரட்டுவதாகவும் கூறி மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் என்பவருக்கெதிராக கடந்த மார்ச் மாதம் சுகவீன லீவுப் போராட்டத்தை மூதூர் வலய ஆசிரியர்கள் மேற்கொண்ட போது முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் அவரை இடமாற்றம் செய்வதாக வாக்குறுதியளித்திருந்தனர். ஆனால் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கமைய இடமாற்றம் செய்யப்படாததை கண்டித்து இம்மாதம் 16ம் திகதி மீண்டும் சுகவீன லீவுப் போராட்டத்தை மேற்கொண்டனர். இதன் பின்னர் இம்மாதம் 20ம் திகதி ஜனாதிபதி மூதூருக்கு வரும்போது அவரிடமும் முறையிட ஏற்பாடுகளை செய்திருந்த வேளையில் இவ்விடமாற்றம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஜனாப். மன்சூர் இதற்கு முன்னர் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையாற்றிய போதும் ஆசிரியர்களின் எதிர்ப்புக்கள் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top