இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரத்தில்

கிழக்கு மாகாண ஆளுனர் இரட்டை வேடம் பூண்டுள்ளாரா?

(அபூ முஜாஹித்)



அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேச மாயக்கல்லி மலையில் பௌத்தக்கோயில் அமைக்கும் விடயத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ இரட்டை வேடம் பூண்டுள்ளாரா எனும் கேள்வி சிறுபான்மை மக்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.
இறக்காமம் மாயக்கல்லி மலையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணி ஒன்றில் அடாவடித்தனமாக உட்புகுந்து பௌத்த பிக்குகள் பௌத்த கோயிலொன்றை அமைக்க முற்படுவது குறித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண ஆளுனரிடம் பேசி இதில் தலையிடுமாறும் கோரியுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி பௌத்த கோயில் அமைக்கும் விடயத்தில் தலையீடு செய்யுமாறு ஆளுனரைக் கோரியுள்ளார். இதன்போது தமக்கு அதிகாரமில்லை என ஆளுனர் ஒஸ்ரின் கூறியுள்ளார். அங்கு கிழக்கு மாகாண காணி ஆணையாளர் நில அளவீட்டுக்காக சமூகமளித்துள்ளாரே என அவர் கேட்ட போது மாகாணக்காணி ஆணையாளர் அங்கு சென்றமை பற்றி தனக்குத் தெரியாது என மறுத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள மாயக்கல்லி மலை பிரச்சினையின் போது மாகாண ஆளுனருக்கு அறிவிக்காமல் அவரது எழுத்து மூல அனுமதியைப் பெறாமல் மாகாணக்காணி ஆணையாளர் அம்பாறைக்கு சென்றிருப்பாரா? அப்படியாயின் மாகாண ஆளுனரின் கட்டுப்பாட்டில் கிழக்கு மாகாணக்காணி ஆணையாளர் இல்லையா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதன்மூலம் கிழக்கு மாகாண ஆளுனர் யாரை ஏமாற்ற முற்படுகிறார்.
பொதுவாக தற்போதைய கிழக்கு மாகாண ஆளுனர் மாகாண விடயங்களில் கவனம் செலுத்துவதை விட ஜனதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராக செயற்படுவதிலும் ஜனாதிபதியுடன் வெளிநாடுகளுக்கு செல்வதிலுமே கவனமாக உள்ளார். இவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த சமயம் முஸ்லிம்களுக்கு எதிரான இஸ்ரவேலின் உளவுப்பிரிவினருடன் தொடர்புபட்டிருந்ததாகவும் கதையொன்று உள்ளது. அதேவேளை முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் புத்தகமொன்றை எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய ஆளுனர் தனது வயது, முதுமை காரணமாக இலகுவில் எல்லாவற்றையும் மறந்து விடுகிறார். பத்து நிமிடத்திற்கு முன்னர் கதைத்தவற்றை பின்னர் கேட்டால் அவ்வாறு கதைத்தமை பற்றி தனக்கு ஞாபகமில்லை எனக்கூறுகிறார். மாயக்கல்லி மலை விவகாரத்தில் முன்னுக்குப்பின் முரணாக செயற்படும் இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர்ப் பிரதேசத்தில் சிங்களவர்களுக்குக் காணியைப் பெற்றுக்கொடுப்பதில் எவ்வாறு மும்முரமாக செயற்பட்டார் என்பதனை எல்லோரும் நன்கு அறிவர்.
இறக்காமம் மாயக்கல்லி பௌத்த கோயில் கல் நடுகைக்காக ஞானசார தேரர் ஜனாதிபதி செயலகத்தின் கடிதத்துடன் சென்று அம்பாறை அரசாங்க அதிபரது வாகனத்தில் அவருடன் அவ்விடத்திற்குச் சென்றுள்ளார் என்பது பகிரங்கமான உண்மையாகும். இவ்விடயத்தில் கிழக்கு மாகாண ஆளுனரும், அம்பாறை அரச அதிபரும், அமைச்சர் தயா கமகே, முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகர எல்லோரும் ஒன்றிணைந்து இயங்குகின்றனர்.
இவர்கள் முஸ்லிம் மக்களுக்கு ஒரு முகத்தினையும் சிங்கள மக்களுக்கு ஒரு முகத்தினையும் காட்டிக்கொண்டு முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கையாலாகாத தனத்தை வெகு இலாவகமாகக் கையாண்டு வருகின்றனர். பொதுவாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெறுவதற்கு முன் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் இழந்தவற்றை விட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றத்தின் பின்னர் அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் அவர்களது கைகளுக்கு வந்த பின்னர் இழந்தவை ஏராளம் என மக்கள் எண்ணத் தொடங்கியுள்ளனர்.
அம்பாறை அரச அதிபராக ஒரு முஸ்லிம் இருந்தால் அல்லது கிழக்கு மாகாண ஆளுனராக ஒரு முஸ்லிம் இருப்பதை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விரும்புமாக இருந்தால் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு விடிவு காலம் பிறக்கும் எனவும் கதைக்கத் தலைப்பட்டுள்ளனர். மாகாணத்தின் தலைவரும், மாவட்டத்தின் தலைவரும் தீவிரவாத சிங்களப்போக்கில் இருப்பதனால் மாயக்கல்லி மலை விவகாரம் உட்பட சகல விவகாரமும் முஸ்லிம்களுக்கு பாதகமாகவே முடியும்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top