மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளரின் இடமாற்றம்

ஏனைய வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கு அபாய சமிக்ஞை

(அபூ முஜாஹித்)



நாட்டின் வலயக்கல்வி அலுவலக முறையில் ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்ட வரலாறு ஏனைய வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கான தெளிவான சமிக்ஞையாக கொள்ளப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கம் என்பன தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து வெளியிடுகையில்,
கிழக்கு மாகாணத்தின் மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளரின் நடவடிக்கைகள் காரணமாக அவ்வலய ஆசிரியர்களும், அதிபர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். அங்குள்ள ஆசிரியர்கள் பல்வேறு மன உளைச்சலால் பாதிக்கப்பட்டனர். மத ரீதியான அவமதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இதன் காரணமாக அங்குள்ள ஆசிரியர்கள் சுகவீன லீவுப் போராட்டத்தை அமைதியான முறையில் ஆரம்பித்தனர். இதற்காக எமது தொழிற்சங்க உதவியை நாடிய போது அவர்களுக்கு எமது ஆதரவை வழங்கினோம். ஆசிரியர்களுக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றும் வலயக்கல்விப் பணிப்பாளரை மாற்றுமாறு ஆளுனரையும், கல்வி அமைச்சின் செயலாளரையும் கோரியதுடன் இவரை இடமாற்றம் செய்வதில் வெற்றியும் கண்டனர்.

ஆசிரியர்களை அடிமைகள் போல் நடாத்தி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கு மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் மன்சூரின் இடமாற்றம் மூலம் தெளிவான செய்தியை எத்தி வைத்துள்ளோம் என்றார்.
இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கம் சார்பாக அதன் செயலாளர் ஜனாப். முக்தார் கருத்துத் தெரிவிக்கையில்,
மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் மன்சூர் இடமாற்றம் செய்யப்பட்டமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆரம்பம் முதலே மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனத்தில் இடம்பெற்ற உண்மைக்குப் புறம்பான விடயங்கள் குறித்து பல முறைப்பாடுகளை செய்தோம். இவர் தொடர்பாக இவரால் புரியப்பட்டதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து நீதிமன்றிற்கு உண்மைத்தகவல்கள் வெளிப்படுத்தப்படாமல் கிழக்கு மாகாண அதிகாரிகளால் மறைக்கப்பட்டது.
செல்லும் இடங்களில் எல்லாம் பிரச்சினை என்றால் யார் பக்கம் தவறு என்பதனை இனியாவது கிழக்கு மாகாண அதிகாரிகள் உணர்;ந்து கொள்ள வேண்டும் என்றார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top