இலங்கை கல்வி நிருவாக சேவை

பிரமாணக்குறிப்பிற்கு முரணான

சம்மாந்துறை, கிண்ணியா வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனம் 

பிரதிவாதிகளின் பதில் மனு இன்றி விசாரணைக்கு

மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானம்

(அபூ முஜாஹித்)


இலங்கை கல்வி நிருவாக சேவை பிரமாணக்குறிப்பிற்கு முரணாக இடம்பெற்ற சம்மாந்துறை, கிண்ணியா வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனம் தொடர்பான வழக்கை எதிராளிகளின் எதிர்மனு இன்றியே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம் (19) தீர்மானித்ததாக சட்டத்தரணி கலாநிதி. யூ.எல்.அலிசக்கி தெரிவித்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான திருமதி. ரோஹினி வல்ககம, கலாநிதி. எஸ்.துரைராசா ஆகியோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் தாக்கல் செய்துள்ள இவ்வழக்கில் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சு, கிண்ணியா, சம்மாந்துறை தற்காலிக வலயக்கல்விப் பணிப்பாளர்கள், அரச சேவை ஆணைக்குழு, கல்வி அமைச்சு, சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுதாரரின் மனுக்கு எதிர் மனுவை அரச சேவை ஆணைக்குழு, கல்வி அமைச்சு என்பன சட்டமா அதிபர் ஊடாக தாக்கல் செய்த போதிலும் கடந்த ஒன்றரை வருடமாக ஏனைய நான்கு பிரதிவாதிகளும் நீதிமன்றிற்கு பதில் அளிக்கவில்லை.

பதில் அளிக்காமையை கவனத்தில் எடுத்த நீதியரசர்கள் அந்நால்வரின் பதிலின்றியே இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்க தீர்மானித்து அதற்கான திகதியாக ஒக்டோபர் 17ம் திகதியை தீர்மானித்ததுடன் அத்தினத்திற்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

அரச சேவை ஆணைக்குழுவும், கல்வி அமைச்சும் சட்டமா அதிபர் ஊடாக இலங்கை கல்வி நிருவாக சேவை பிரமாணக்குறிப்பின்படி இடம்பெறும் நியமனமே செல்லுபடியானது என மன்றுக்கு தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி கலாநிதி. யூ.எல். அலிசக்கி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top