நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள
இனவாத செயற்பாடுகளை கட்டுபடுத்துமாறு
பிரதமரிடம் அமைச்சர் ஹிஸ்புல்லா கோரிக்கை
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் ஏற்பட்டுள்ள இனவாத சூழல் முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் பதற்றமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. ரமழான் மாதம் நெருங்கும் வேளையில் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதானது முஸ்லிம்களது மத அனுஷ்டான விடயங்களுக்கு மிகவும் பாதிப்பதாக அமையும்.
எனவே, இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த நல்லாட்சி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் நல்லாட்சிக்கு அரசுக்கு விசேட பொறுப்புள்ளது.
தமது மத அனுஷ்டானங்களை நிம்மதியாகவும், அமைதியாகவும் முன்னெடுக்க வேண்டும். அதற்கான சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே முஸ்லிம்கள் கடந்த தேர்தல்களில் தமது வாக்குகளைப் பயன்படுத்தினர்.
அதற்கமைய ஆட்சியில் அமர்த்தப்பட்ட நல்லாட்சி அரசு குறுகிய காலம் அதனை சரிவர நிறைவேற்றியது. எனினும், மீண்டும் இனவாத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இது முஸ்லிம்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. எனவே, இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தி இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment