மோடி வருகையின் போது கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!
மே தினக் கூட்டத்தின் போது மஹிந்த அணியினர் அழைப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தின் போதே, இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டுக்கான சர்வதேச வெசாக் தின கொண்டாட்டம் இந்த மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ளது.இதில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வரவுள்ளார்.
எவ்வாறாயினும், தனது இலங்கை விஜயம் தொடர்பில் மோடி, தற்போதைய அரசாங்கத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார் என காலி முகத்திடலில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பிலான ஒப்பந்தம் குறித்து,மோடியும் நல்லாட்சி அரசாங்கமும் விவாதித்து வருவதாக வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கும் அனைத்து கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மோடியின் விஜயத்தின் போது கறுப்பு கொடிகளை ஏந்த வேண்டும் என விமல் வலியுறுத்தியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் இலங்கையை, இந்தியாவுக்கு விற்க முயற்சி செய்கிறார்கள் எனவும் விமல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சி மே தின பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment