அட்டப்பள்ளம் மயான விவகாரம்
அடுத்த தவணை ஜூன் 01 இல்
அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டப்பளம் இந்து மயான விவகாரம் தொடர்பிலான வழக்கு இன்று 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சம்மாந்துறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அட்டப்பள்ளம் மக்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சந்திரமணி தலைமையிலான குழுவினர் ஆஜராகி வாதிட்டனர்.
விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரும் நீதிமன்றில் ஆஜரானதைத் தொடர்ந்து, இன்றைய விசாரணைகளை அடுத்து, வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 01 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் அறிவித்தார்.
அடுத்த தவணைத் திகதியான ஜூன் மாதம் 01 ஆம் திகதி குறித்த 23 பேரையும் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
நிந்தவூர் அட்டப்பள்ள இந்து மயான விவகாரம் தொடர்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்ட சம்பவத்தின்போது இரு அரச உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டதன் எதிரொலியாக அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த 23 பொதுமக்கள் அழைக்கபட்டு அவர்களில் இரு பெண்களுக்கு பிணை வழங்கப்பட்டு மிகுதி 21 ஆண்களையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். அதன் பின்னர் இரு நாட்களில் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டதோடு, குறித்த 23 பேரையும் இன்று 16 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.


0 comments:
Post a Comment