பிளாஸ்டிக் போத்தல் தண்ணீரால்
உடல் நலத்துக்கு ஆபத்து
மருத்துவ ஆய்வில் தகவல்
   


இரசாயன துகள்கள் கலந்து இருப்பதால் பிளாஸ்டிக் போத்தல் தண்ணீரால் உடல் நலத்துக்கு ஆபத்து ஏற்படும் என்று அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிளாஸ்டிக் பெட்பாட்டில், பிளாஸ்டிக் கேன்கள் ஆகியவற்றில் அடைத்து விற்கப்படும் குடிநீரை பயன்படுத்துவது இப்போது அதிகரித்துள்ளது. பெரும்பாலான நகரங்களில் இந்த வகை குடிநீரைத்தான் மக்கள் நம்பி இருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் இதே நிலை உருவாகி விட்டது. பெரும்பாலான மக்கள் பிளாஸ்டிக் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் போத்தல்களையே தங்களுடன் எடுத்துச்சென்று தேவையான நேரங்களில் பயன்படுத்துகிறார்கள். இந்த கலாச்சாரம் இப்போது நாகரீகமாகவும் மாறிவிட்டது.
ஆனால், பிளாஸ்டிக் போத்தல் தண்ணீர் உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று இப்போது வெளிவந்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுசம்பந்தமாக அமெரிக்காவில் உள்ள ஆர்ப்மீடியா என்ற பத்திரிகையாளர் அமைப்பு நியூயார்க் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆய்வு செய்துள்ளது. நியூயார்க் பல்கலைக்கழக மைக்ரோ பிளாஸ்டிக் ஆய்வு பேராசிரியர் ஷெர்ரிமேசன் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள 11 முன்னணி நிறுவனங்களின் 250 குடிநீர் போத்தல்களை ஆய்வுக்கு எடுத்து அவற்றை பரிசோதித்துள்ளனர்.
இந்த போத்தலில் உள்ள தண்ணீரை 1.5 மைக்ரான் அதாவது 0.0015 மில்லி மீட்டர் அளவு துவாரம் கொண்ட வடிகட்டி மூலம் வடித்தெடுத்து பின்னர் அந்த வடிகட்டியில் தேங்கியுள்ள பொருட்களை ஆய்வு செய்தார்கள். மைக்ராஸ்கோப் மற்றும் இன்ப்ரா ரெட் பரிசோதனை மூலம் இந்த ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அதில் ஏராளமான பிளாஸ்டிக் மற்றும் ரசாயன துகள்கள் இருந்து தெரியவந்தது.
அதாவது பாலிபுரோப்லின், நைலான், பாலித்தீன், டெரபதலேட் (பெட்) துகள்கள் அந்த வடிகட்டியில் தேங்கி இருந்தன. அதாவது தண்ணீருக்குள் இந்த துகள்கள் கலந்து இருந்தன.
சராசரியாக ஒரு லிட்டர் தண்ணீரில் 0.1 மில்லி மீட்டர் அளவு கொண்ட 10.4 பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருந்தன. சில போத்தல்களில் ஒரு லிட்டர் நீரில் 10 ஆயிரம் துகள்கள் கூட கலந்திருப்பது தெரியவந்தது. ஒருசில போத்தல்களில் மட்டுமே இந்த துகள்கள் இல்லாமல் இருந்தது. மொத்தம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 93 சதவீத போத்தல்களில் பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த துகள்களை செரிமானம் செய்யும் சக்தி நமது உடலுக்கு கிடையாது. குடலுக்குள் செல்லும் இந்த துகள்கள் மிக சிறியதாக இருக்கும். அதாவது இரத்த சிவப்பணுவில் உள்ள செல்லைவிட இது சிறியது.
இதனால் அந்த பிளாஸ்டிக் துகள்கள் குடல்வழியாக இரத்த குழாய்க்குள் சென்று ஒவ்வொரு உறுப்புகளிலும் தேங்குகிறது. இதன் காரணமாக ஈரல், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்படும். மேலும் பல்வேறு பாதிப்புகளையும் உடலில் அவை ஏற்படுத்தும்.
எனவே போத்தல் குடிநீர் மற்றும் பிளாஸ்டிக் கேன் குடிநீர் உடல்நலத்திற்கு ஏற்றதல்ல என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

உலகம் முழுவதும் 210 கோடி பேர் தற்போது போத்தல் குடிநீரை பயன்படுத்துவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி லிட்டர் போத்தல் குடிநீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ரூ.9 லட்சத்து 36 ஆயிரம் கோடிக்கு தண்ணீர் வர்த்தகம் நடைபெறுகிறது.
ஆனால் அந்த தண்ணீரை குடிப்பது உடல்நலத்திற்கு கேடு ஏற்படுத்தும் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
இது சம்பந்தமாக வடக்கு கரோலினா பல்கலைக்கழக வி‌ஷத்தன்மை ஆய்வு பேராசிரியர் ஸ்காட்பெல்சர் கூறும்போது, போத்தல் தண்ணீரை விட குழாயில் நேரடியாக வரும் தண்ணீர் தான் பாதுகாப்பானது. எனவே மக்கள் அவற்றுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
வேறு பாதுகாப்பான தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் போத்தல் தண்ணீரை பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
சுகாதாரமற்ற தண்ணீரால் ஒவ்வொரு நாளும் 4 ஆயிரம் குழந்தைகள் உயிரிழப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பிளாஸ்டிக் போத்தலும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பது இன்னும் பீதியை உருவாக்குகிறது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top