அவுலியா அடக்கஸ்தலங்களை
இலக்கு வைக்கும் தீவிரவாதிகள்!
பொலிஸாருக்கு அவசர எச்சரிக்கை




தேசிய தவ்ஹித் ஜமாஅத் அவுலியா அடக்கஸ்தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை நடத்திய தாக்குதலில் தொடர்ச்சியாக அந்த அமைப்பு இந்த தாக்குதலை நடத்த தயாராகி வருவதாக பொலிஸ் மா அதிபர் அலுவலகம், பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளது.

அவுலியா பள்ளிகளை ( உயிரிழந்த முஸ்லிம் மத தலைவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள தர்கா பள்ளிகள்) இலக்கு வைத்து இந்த தாக்குதலை நடத்த தேசிய தவ்ஹித் ஜமாத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவதானம் செலுத்துமாறும், பிரதேசங்களின் முக்கியஸ்தர்களுக்கு இது பற்றி தெரியப்படுத்துமாறும், முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு சம்பந்தமாக கூடிய கவனம் செலுத்துமாறு அறிவித்துள்ள பொலிஸ் மா அதிபரின் அலுவலகம், உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமிய சூபி வழிமுறையை பின்பற்றும் பள்ளிவாசல்களில் உயிரிழந்த இஸ்லாமிய மத தலைவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொழுகை நடத்தும் முறை பின்பற்றப்படுகிறது.

இந்த வழிபாட்டு முறையை சவூதி அரேபியாவை அடிப்படையாக கொண்டு செயற்படும் வகாபிஸத்தை (ஓர் இறைக்கொள்கை) பின்பற்றும் அடிப்படைவாதிகள், முஸ்லிம் நாடுகள் உட்பட உலக நாடுகளில் உள்ள சூபியிசத்தை பின்பற்றும் பள்ளிவாசல்கள் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ள இவ்வாறான பள்ளிவாசல்கள் மீது வகாபி அடிப்படைவாதிகள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வகாபிஸத்தை உலக நாடுகளில் பரப்ப சவூதி அரேபியா கோடிக்கணக்கில், இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு நிதியுதவியை வழங்கி வருவதாக கூறப்படுகிறது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top