தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில்
இந்தியாவில் இடம்பெறும் பேச்சுவார்த்தையில்

பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் சார்பாக பேசுவதற்கு எவருமில்லை

முஸ்லிம் மக்கள் கவலை


வடக்கு, கிழக்கு தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்தியாவில் நாளை திங்கள் கிழமை இடம்பெறவிருக்கும் பேச்சுவார்த்தையில்  இம்மாகாணங்களில் வாழும் மற்றொரு இனமான முஸ்லிம்களுக்கான பிரச்சினைகள், பாதிப்புக்கள் போன்றவற்றையும் தெளிவுபடுத்தி இவர்களுக்கான தீர்வுகளைக் காண்பதற்கு முஸ்லிம் மக்கள் சார்பாக எந்தவொரு அமைச்சரும் அழைத்துச் செல்லப்படாதது குறித்து முஸ்லிம் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன். பாட்டாளி சம்பிக்க ரணவக்க, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் அபேகோன் ஆகிய முக்கிய நபர்களுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்தியா சென்றுள்ளார். நாளை நண்பகல் 12 மணியளவில் பிரதமர் மோடியை  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் குழுவினரும்  சந்திக்க உள்ளனர்.
அங்கு இலங்கையில் தமிழர்களுடனான அமைதி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள், பொருளாதாரம், மீள் குடியேற்ற விவகாரங்கள், தமிழர் பகுதியில்  இராணுவத்தை திரும்ப அழைத்தல், தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தை நிறைவேற்றுவது, தமிழக மீனவர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய  அம்சங்களும் பேச்சுவார்த்தையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்தியாவில் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை நடத்தி தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஓரளவாவது தீர்வு வழங்குவதற்கு சில இணக்கப்பாடுகளுக்கு வரும் சந்தர்ப்பத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களிடையே சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை அங்கு எடுத்துக் கூறி தீர்வுகளுக்கான இணக்கப்பாடுகளைக் கொண்டு வருவதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படாதது குறித்து முஸ்லிம் புத்திஜீவிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் இப்பயணத்தில் சென்றுள்ள குழுவினருடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் இணைந்து கொள்ளலாம் என அறிவித்திருந்த போதும் மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள முஸ்லிம் மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து அம்மக்களின் குரலாக ஒலித்து செயல்பட வேண்டிய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் எமது நாட்டு ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும்  ஒன்று கூடி தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்குவது போன்ற முக்கியமான விடயங்கள் பேசும் இச்சந்தர்ப்பத்தில் சந்தர்ப்பத்தை பயண்படுத்தாமல் செயலற்றுப் போய்விட்டார்களா என புத்திஜீவிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
வடக்கு, கிழக்கு வாழ்கின்ற தமிழர்களுக்கு புதிய அரசாங்கம் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் இம்மாகாணங்களில் பல வருட காலமாக  பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பிரச்சிணைகளையும் எடுத்துகூறி தீர்வுகளைக் காண்பதற்கும் உடன்பாடுகளுக்கு வருவதற்கும் தாமும் இந்தியப் பயணத்தில் பங்கு கொண்டு பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான தீர்வுகளைத் தேட வேண்டிய ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விட்டிருக்கும் எமது முஸ்லிம் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து முஸ்லிம்கள் சந்தேகம் வெளியிடுகின்றனர்.  
இந்நிலையில், எமன் நாட்டு பிரஜை ஒருவரைக் கொலை செய்து அவரது உடைமைகளை கொள்ளையடித்தார்கள் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் சவூதி அரேபியா நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர் (சிங்கள சகோதரர்கள்) மூவரை தண்டனையிலிருந்து விடுவிக்கும் வகையில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட பிரதிநிதியாக முஸ்லிம் அமைச்சர் ஒருவர் சவூதி அரேபியா செல்லவுள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கப்படுகிறது.
பாவம்  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல வருட காலமாக பாதிக்கப்பட்டு எப்போது எமக்கு விமோசனம் கிடைக்கும் எனக் காத்திருக்கும் அப்பாவி முஸ்லிம் மக்கள்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top