முஸ்லிம் முதலமைச்சர் பற்றி பேசுவது

இனங்களுக்கிடையில் குழப்பும் நோக்கத்திலாகும்

உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி

கிழக்கு மாகாண சபையில் தமக்கான முதலமைச்சர் பதவியை மத்திய அரசில் அமைச்சுப்பதவிக்காக கைவிட்டதன் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு துரோகம் செய்த  முஸ்லிம் காங்கிரஸ் தற்போதுமுஸ்லிம் முதலமைச்சர் பற்றி பேசுவது இனங்களுக்கிடையில் குழப்பும் நோக்கத்திலாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சம்பந்தமாக கட்சியின் கருத்து என்ன என ஊடகவியலாளர்கள்  வினவிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது, உலமா கட்சியை பொறுத்த வரை கிழக்கு மாகாண சபையில் தமிழ் பேசும் ஒருவரே முதலமைச்சராக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது. 2008ம் ஆண்டு நடை பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சர் தமிழ் முதலமைச்சர் என தமிழ் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் இனவாதத்தை கிளப்பிக்கொண்டிருந்த போது தமிழ் பேசும் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டால் போதும் என்பதை நாம் பகிரங்கமாக கூறினோம்.
2012ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் நாம் தே கவுக்கு ஆதரவளித்ததுடன் தேர்தலை தொடர்ந்து தமிழ் கூட்டமைப்பு மற்றும் தே கவுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரும்படி முஸ்லிம் காங்கிரசுக்கு மேடை போட்டு விளக்கமளித்தோம். கடந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதை துணிந்து முதலில் முன்வைத்த ஒரே கட்சி உலமா கட்சியாகும். அதே போல் தமிழ் கூட்டமைப்பும் முதலமைச்சு பதவியையும் அமைச்சு பதவிகளையும் முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்குவதற்கு தயாராக இருந்தது. ஆனால் மத்தியில் தமது அமைச்சு பதவிகளை காப்பாற்றுவதற்காக கடந்த அரசுக்கு மு. கா ஆதரவளித்தது.
இப்போது மத்தியில் அரசாங்கம் மாறியுள்ளதாலும் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவின்றியே தமிழ் கூட்டமைப்பினால் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலைமை இருந்தும் முஸ்லிம் முதலமைச்சர் என்ற கிறீஸ் பூதத்தை உருவாக்கி தமிழ் முஸ்லிம் இனவாத்தை உருவாக்க முஸ்லிம் காங்கிரஸ் முயற்சிப்பது கண்டிப்புக்குரியதாகும்.
ஏற்கனவே கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் இருக்கிறார். அவர் தம்மால் பிரேரிக்கப்பட்ட முதலமைச்சர் என்று கூட முஸ்லிம் காங்கிரஸ் கூறியிருந்தது. கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்படாத பட்சத்தில் முஸ்லிம் முதலமைச்சர்தான் தேவை என்றால் தற்போதைய முதலமைச்சர் நஜீப் மஜீத் முதலமைச்சராக இருக்கலாம். முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்தான் முஸ்லிம் மற்றவர் முஸ்லிம் இல்லையா என நாம் அக்கட்சியினரிடம் கேட்கின்றோம். இஸ்லாம் என்ற வகையில் பார்த்தால் இன்றைய முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை விட நஜிப் மஜீத் நல்லதொரு முஸ்லிம் என கூற முடியும். ஆதே போல் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் கிழக்கை தலைமையாக கொண்ட முஸ்லிம் கட்சியொன்றை வளர்த்திருந்தால் இன்று இத்தகைய நிலைகள் ஏற்பட்டிருக்காது.

ஆகவே கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை நாம் ஆதரிக்கும் அதே வேளை எந்தக்கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் இருக்கின்றார்களோ அந்தக்கட்சிக்கு முதலமைச்சர் பதவி வழங்குவதன் மூலம் இப்பிரச்சினையை பிரச்சினையாக்காமல் இன ஒற்றுமையை ஏற்படுத்த அனைவரும் முயல வேண்டும் என முஸ்லிம் உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது என்றார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top