அமைச்சர் ரிஷாத்தை சந்தித்தது உண்மையே
ஆனால் அவர் எந்தப் பொதியையும் தரவில்லை

- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல்

(.எச்.சித்தீக் காரியப்பர்)

கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர் தன்னைச் சந்தித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனிடம் அழைத்துச் சென்றார் என்றும் இதற்கான ஏற்பாடுகளை மாகாண சபை உறுப்பினரான அன்வரே செய்ததாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான .எம். ஜெமீல் என்னிடம் தெரிவித்தார்.
என்னுடனான அவரது தொலைபேசி உரையாடலை அப்படியே தருகிறேன்....
நான்:- நீங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைரைச் சந்தித்தீர்களா?
அவர்:- ஆம்
நான்:- நீங்கள் அவரிடம் சென்றீர்களா?
அவர்:- இல்லை.. அவர் எனது வீட்டுக்கு (கொழும்பு) வந்து என்னைச் சந்தித்தார்.
நான்:- யார் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்?
அவர்:- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர்.
நான்:- இந்த திடீர் சந்திப்புக்கான அவசியம் என்ன?
அவர்:- ஹாபிஸ் நஸீர் கிழக்கு மாகாண முதல்வராக வரக் கூடாது என்பதற்கான சில ஏற்பாடுகளை முன்னெடுக்கவே?
நான்:- சதித் திட்டமா?
அவர்:- இல்லை கிழக்கு மாகாண சபையில் 19 பேரின் ஆதரவுடனேயே முதலமைச்சராக ஒருவர் செயற்பட முடியும். இந்த எண்ணிக்கை ஹாபிஸ் நஸீருக்கு உள்ளதா என்பது பற்றியும் அவ்வாறு இருந்தால் அந்த ஆதரவினைக் குறைப்பது தொடர்பிலும் எனக்கான ஆதரவினை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடினோம்.
நான்:- இந்த விடயத்தில் சுபைரின் நிலைப்பாடு எவ்வாறு இருந்தது?
அவர்:- அதற்காகத்தானே அவர் எனது வீட்டுக்கு வந்தார். அவர் தனக்கு ஆதரவு வழங்குவதுடன் தனது கட்சியின் ஏனைய உறுப்பினரின் ஆதரவையும் பெற்றுத் தருவதாகவும் எனக்கு வாக்குறுதியளித்தார்.
நான்:- அவரது கட்சியை சேர்ந்த ஷிப்லி பாறூக், ஹாபிஸ் நஸீருக்கு ஆதரவு வழங்கியுள்ளாராமே?
அவர்:- நானும் கேள்விப்பட்டேன். அது மட்டுமல்ல. இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த அன்வர் கூட இறுதியில் ஹாபிஸ் நஸீரின் பேக்கை தூக்கிக் கொண்டு ஹெலிக்கொப்டருக்கு அருகில் நிற்பதனையும் கண்டு அதிர்ந்து விட்டேன்.
நான்:- அமைச்சர் ரிஷாத் பதியுதீனை நீங்கள் சந்தித்தீர்கள் தானே?
அவர்:- ஆம் சந்தித்தது உண்மைதான். கிழக்கு மாகாண சபையில் அவரது கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற்று தருவதாக கூறி சுபைர் என்னை அமைச்சர் ரிஷாதிடம் அழைத்துச் சென்றார்.
நான்:-அங்கு நடந்தது என்ன?
அவர்:- என்னை முதலமைச்சராக்குவதற்கான ஆதரவினைக் கோரினேன்.
நான்:- அமைச்சர் என்ன கூறினார்?
அவர்:- தான் கலந்தாலோசிப்பதாகவும் பெரும்பாலும் ஆதரவினை வழங்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.
நான்:- அமைச்சர் ரிஷாத் உங்களை தனது கட்சியில் இணையுமாறு கூறி ஒரு பொதியை அவர் உங்களிடம் ஒப்படைத்தார் என்று கூறப்படுகிறதே?
அவர்:- இல்லை.. அமைச்சர் ரிஷாத் தனது கட்சியில் இணையுமாறு என்னை கேட்டுக் கொள்ளவும் இல்லை. அவர் என்னிடம் எந்தப் பொதியையும் தரவில்லை. நான் எனது சமூகத்தையோ எனது கட்சியையோ விற்றுப் பிழைப்பு நடத்த தயாரில்லை.
நான்:- முஸ்லிம் காங்கிரஸை பிளவுபடுத்த ரிஷாத் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த முயற்சித்தார் என்று கூறப்படுகிறது. இதனை நங்கள் விளக்கமாக கூறிவேண்டும்.
அவர்:- அப்படி எதுவுமே கூறவில்லை ரிஷாதின் மனதில் அவ்வாறு எதுவும் காணப்படவில்லை என நினைக்கிறேன். இந்த விடயம் தொடர்பில் அவர் எதனையும் பேசவில்லை... நானும் பேசவில்லை.. இது முற்று முழுக்க தவறான விடயம்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top