புதிய கிழக்கு முதலமைச்சரின் கவனத்துக்கு......

மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையிலான

பிரதேசங்களின் ரயில் பாதை




அமைச்சர் ரவூப் ஹக்கீம் ராஜாங்க அமைச்சர் ஹஸனலி,
பிரதி அமைச்சர் அமீர் அலி
கிழக்கு முதலமைச்சர்  ஹாபீஸ் நஸீர் அஹமத் ஆகியோர்களுக்கு

கிழக்கு மாகாண மக்களின் பகிரங்க வேண்டுகோள்!


மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையிலான பிரதேசங்களின் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை புத்துயிர் அளித்து  நடைமுறைப் படுத்துவதற்கு கிழக்கு     மாகாணத்திலுள்ள அதிகாரமுள்ள அரசியல்வாதிகள் தீவிரம் காட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்குப் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் ராஜாங்க அமைச்சர் ஹஸனலி பிரதி அமைச்சர் அமீர் அலி, முதலமைச்சர்  ஹாபீஸ் நஸீர் அஹமத் ஆகியோர்கள் ஒன்றினைந்து புதிய அரசிடம் இதற்கான வேண்டுகோளை விடுத்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உடனடியாகச் செயல்படவேண்டும் எனவும் மட்டக்களப்பு ,அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் வாழும் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டக் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள் பல வழிகளிலும் நன்மை பெறக்கூடிய இத்திட்டம் மஹிந்த அரசாங்கத்தினால் ஏனோ? கவனத்தில் எடுக்கப்படாமல் இருந்தது.
மட்டக்களப்பு  வரையிலுள்ள ரயில் பாதையானது பொத்துவில் வரை விஸ்த்தரிக்கப்படல் வேண்டும். கிழக்கில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட கரையோர மக்கள் பல வழிகளிலும் நன்மையடைய வேண்டும்  இதற்கு மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான ரயில் சேவைக்குரிய பாதை உருவாக்கப்படல் வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையுடன் கடந்த 1992 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்தில்  முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் .ஆர். மன்சூர் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் உதவியுடன்  நடவடிக்கை எடுத்திருந்தார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் அனுமதிக்கு இணங்க ஈரான் நாட்டிற்குச் சென்று மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான ரயில் பாதை அமைக்கும் விடயமாக உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னாள் அமைச்சர் மன்சூர் அன்று மேற்கொண்டிருந்தார். இப் பேச்சுவார்த்தையின் பயனாக 1993 ஆம் ஆண்டு ஈரான் நாட்டு அரசாங்கத்தின் பொறியியல் நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று மட்டக்களப்பு கல்முனை பிரதேசங்களுக்கு வருகை தந்து மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான ரயில் பாதை விஸ்த்தரிப்பு செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன் பின்னர் இதற்குத் தேவையான திட்ட வரைவுகளையும் பூர்த்தி செய்திருந்தனர். ரயில் பாதை ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் ஆட்சி மாற்றம் காரணமாக இத்திட்டம் அப்படியே கைவிடப்பட்ட நிலையில் இதுவரையும் இருந்து கொண்டிருக்கிறது.
இந்த ரயில் பாதை விஸ்த்தரிப்பு விடயமாக முன்னாள் அமைச்சர் .ஆர். மன்சூர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் இக்கடிதத்திற்கு ஜனாதிபதியிடமிருந்து தங்களது கோரிக்கையின் பிரகாரம் இது தொடர்பில்  புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளரினால் கவனம் செலுத்தப்படும் என பதில் வந்ததாகவும் பின்னார் பொது முகாமையாளரோடு தொடர்பு கொண்டபோது இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதாகவும் தெரியவருகின்றது.
இதேபோன்று முன்னாள் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் இத்திட்டம் குறித்து முன்னாள் அமைச்சர் மன்சூர் உரையாடிய போது இதற்கு திட்ட வரைவுகள் தயாரிக்கப்படல் வேண்டும் எனக்கூறி சரியாக கவனத்தில் எடுக்காமல் விட்டதாகவும்  முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதிடம் மட்டக்களப்பு – பொத்துவில் ரயில் பாதை தொடர்பாக ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை எழுதிவிட்டு உங்களுக்கு பிரதி ஒன்றை அனுப்பியிருந்தேனே ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளீர்களா? என கொழும்பில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் நேரடியாச் சந்தித்துக் கேட்டபோது அப்படி கடிதம் வந்ததாக ஞாபகம் இல்லை எனக் கூறியதாகவும் முன்னாள் மன்சூர் கவலையும் வெளியிட்டிருந்தார்.
  மட்டக்களப்பு- பொத்துவில் ரயில் பாதைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பின்வரும் காரணங்கள் இப் பிரதேச மக்களுக்குச் சாதகமாக உள்ளன
   ** மட்டக்களப்பு- பொத்துவில் ரயில் பாதையை செயல்படுத்துவதற்கு ஈரான் நாட்டு அரசாங்கத்தினால் 1993ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.                                                    
  **  கிழக்கு மாகாணம் இன்று கல்வி, வியாபாரம், மற்றும் சுற்றுலாத்துறை போன்றவற்றில் முன்னேற்றம் கண்டிருப்பதுடன் இந்த முன்னேற்றத்தில் புகையிரத சேவை அவசியமானதாக உள்ளது.
  ** இப்பிரதேசத்தில் தென் கிழக்குப் பல்கலைக் கழகம்,ஒலுவில் துறைமுகம், அறுகம்பை உல்லை, பாசிக்குடா என்பன போன்ற சுற்றுலா  பயணிகளின் இடங்கள் அமைந்துள்ளமையும் அதிக எண்ணிக்கையான வெளிநட்டு உல்லாசப் பயணிகள் இப்பிரதேசங்களுக்கு உல்லாசத்திற்காக வருகை தருவதும்
  **    இம்மாகாணத்தில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்ததினால் கரையோரப் பிரதேசம் அழிந்து அப்பிரதேசத்தில் வாழ்ந்த குடியிருப்புக்கள் கடற்கரையிலிருந்து 65 மீற்றருக்கு அப்பால் தவிர்க்கப்பட்டிருப்பது. இது கடற்கரையோரமாகவும் சில பிரதேசங்களில் ரயில் பாதை அமைப்பதற்கு வசதியாக அமைந்துள்ளது
   **  சுனாமிக்குப் பின்னர் பொத்துவில், களியோடை, கல்லாறு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நவீன பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளமை
        கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக் கூடிய இந்த ரயில் பாதைத் திட்டத்தை தென் பிரதேசத்திலிருந்து வடக்குக்கு ரயில் பாதையைக் கொண்டு சென்றதைப் போன்று மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான ரயில் பாதை அமைக்கும் வேலைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது இப்பிரதேச மூவின மக்களினதும் அவாவாக இருந்து கொண்டிருக்கிறது.        
    மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர் .பிரேமதாசவினால் கல்முனையில் (அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலை வளவில்) நடைபெற்ற ஜனாதிபதி பிரச்சாரக் கூட்டமொன்றில் தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை ரயில் பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    இந்த ரயில் பாதைத் திட்டம் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பது காலத்திற்கு காலம் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் இப்பிரதேச மக்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்றே கருத வேண்டியுள்ளதாகவும் இப்பிரதேச புத்தி ஜீவிகள் நலன் விரும்பிகள் கவலை கொண்டவர்களாகக் கருத்து தெரிவிக்கின்றனர்.
இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி குவைத் போன்ற முஸ்லிம் நாடுகளின் உதவியைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர்களே! கிழக்குப் பிரதேச மக்களின் எதிர்கால நன்மை கருதி உங்களுக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துங்கள்.............
கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பர், .ஆர்.மன்சூர், எம்.எச்.எம்.அஷ்ரஃப் ஆகியோர் மக்கள் மனதில் இன்றும் இடம்பிடித்திருப்பது போன்று சகல பிரதேச மக்களுக்கும் உதவக்கூடிய இது போன்ற சேவைகளைச் செய்து மக்கள் மனதில் நீங்களும் ஒரு இடத்தை பிடித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு இப்பிரதேச புத்தி ஜீவிகள் கூறுவதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top