மனிதாபிமானமற்ற முறையில் சம்மாந்துறை ஆசிரியர் இடமாற்றம்

இலங்கை ஆசிரியர் சங்கம் 

வன்மையான கண்டனம்


கிழக்கு மாகாணத்தில் சகல ஆசிரியர் இடமாற்ற அதிகாரங்களும் மாகாணக் கல்விப்பணிப்பாளருக்கு முறைப்படிக் கையளிக்கப்பட்டிருக்கும் நிலையில் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் அந்த அமைச்சின் உதவிச் செயலாளரின் ஒப்பத்துடன் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றம் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
சம்மாந்துறை கல்வி வலயத்தைச் சேர்ந்த வலது குறைந்த இரு பிள்ளைகளின் தந்தையான ஒரு ஆசிரியருக்கே மனிதாபிமானமற்ற முறையில் அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலை ஒன்றுக்கு குறித்த உதவிச் செயலாளரால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை அல் – அர்ஸத் மஹாவித்தியாலயத்தில் உள்ள 56 வலது குறைந்த மாணவர்களைக் கொண்ட விஷேட கல்விப் பிரிவுக்குப் பொறுப்பான குறித்த ஆசிரியர் தமது இரு பிள்ளைகளையும் அப்பிரிவில் அனுமதித்து கற்பித்து வந்தார் இவருக்கே இந்நிலமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மனிதாபிமான அடிப்படையில் இந்த இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரியபோதும் குறித்த உதவிச் செயலாளர் அந்த இடமாற்றத்தை இரத்துச் செய்ய முடியாது எனத் தெரிவித்து புதிய பாடசாலையில் கடமையேற்குமாறும் தற்போதய பாடசாலையில் ஒப்பமிட அனுமதிக்க வேண்டம் எனவும் கேட்டுள்ளார் என மேற்படி சங்கம் மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் முறையிட்டுள்ளது.

மேற்குறித்த உதவிச் செயலாளரது செயற்பாடானது மனிதாபிமானமற்றதும் பழிவாங்கும் அடைப்படையிலுமானதாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் குறித்த இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறும் மாகாணக் கல்விப்பணிப்பாளரைக் கேட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top