முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்த கார்ட்டூன் போட்டி
யு.எஸ். அருங்காட்சியக துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

அமெரிக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்து கார்ட்டூன் போட்டி நடத்திய அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தொடர் சண்டையில் இரண்டு மர்ம நபர்கள் பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர் என அறிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் டல்லாஸ் அருகே இருக்கும் கார்லேண்ட் நகரில் "கர்டிஸ் கல்வெல் சென்டர்" என்ற அரங்கில், முகம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்து கார்ட்டூன் வரையும் போட்டி ஞாயிற்றுகிழமை நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் வெற்றி பெறுபவருக்கு கார்ட்டூனுக்கு 10,000 டாலர் பரிசளிப்பதாக அமெரிக்க சுதந்திரப் பாதுகாப்பு முன்முயற்சி மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் போட்டி நடந்த அரங்குக்கு வெளியே ஞாயிறு இரவு உள்ளூர் நேரப்படி 7 மணி அளவில், காரில் வந்த இருவர், சரமாரியாக அங்கு நின்றுகொண்டிருந்த பாதுகாவலர்களை துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு பாதுகாவலர் படுகாயமடைந்தார். பொலிஸார் நடத்திய பதிலடித் தாக்குதலில் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் குறித்த விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
இஸ்லாமிய மதத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உருவம் கொடுப்பது மற்றும் உருவப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.
இச்சம்பவத்தை தொடர்ந்து கார்ட்டூன் மாநாடு பாதியிலேயே நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top