சாய்ந்தமருது தோணா புனரமைப்பு
மக்களை ஏமாற்றும் ஒரு கபடமான நடவடிக்கையா?
மக்கள் கேள்வி
சாய்ந்தமருது தோணா புனரமைப்பு வேலைத் திட்டம் பொதுத்
தேர்தலை முன்வைத்து சாய்ந்தமருது மக்களை ஏமாற்றும் ஒரு கபடமான திட்டமா? என மக்கள்
கேள்வி எழுப்புகின்றனர்.
தோணா புனரமைப்பு வேலைகள் துரிதமற்ற நிலையில் ஆமை வேகத்தில் செயல்படுவதைக்
நேரில் காணும் பொதுமக்களே இந்த கேள்வியை எழுப்பி பல விமர்சனங்களை செய்து
கொண்டிருக்கின்றனர்.
சாய்ந்தமருது தோணா 30 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்படவிருப்பதாகக்
கூறி கடந்த 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதற்கட்ட அபிவிருத்தி
வேலைகளை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான ரவூப்
ஹக்கீம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இவ்வேலைத் திட்டத்தை இலங்கை காணி மீட்பு மற்றும்
அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் நடைமுறைப்படுத்தவிருப்பதாகவும் இத்திட்டம் இரண்டு
மாதங்களுக்குள் முடிவுறும் எனவும் மக்களுக்கு அவ்விடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இவ்வேலைத் திட்டம் குறித்து மக்கள் சந்தேகங்கள்
கொண்டுள்ளதுடன் சந்திக்கு சந்தி கூடி நின்று தாம் வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களிடமும் கட்சியின்
பிரதேச அரசியல்வாதிகளிடமும் பல கேள்விகளையும் கேட்பது போன்று தமக்கிடையே கேள்விகளை
எழுப்பி கருத்துக்களைப் பரிமாரிக் கொள்கின்றனர்.
பொதுமக்களால் வினவப்படும் கேள்விகளில் சில:-
3 கோடியில் மதிப்பிடப்பட்டுள்ள தோணா புனரமைப்பு வேலைத் திட்டம்
காட்சிப்படுத்தப்பட்ட பலகையில் தெரிவித்துள்ளபடி முழுமையாக இரண்டு மாதங்களுக்குள்
முடிவுறுமா?
இல்லை முதலாம் கட்ட வேலைகள்தான் இரண்டு மாதங்களுக்குள்
முடிவுறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறதா?
முதலாம் கட்ட வேலைகள்தான் இரண்டு மாதங்களுக்குள் முடிவுறும்
என்றிருந்தால் முதலாம் கட்ட வேலைக்குள் எந்த புனரமைப்பு வேலைத் திட்டங்கள
அடங்கியுள்ளன? (இது மக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லையாம்)
முதலாம் கட்ட வேலைக்குள் அதாவது இரண்டு மாதங்களுக்கு
தோணாவில் உள்ள சல்வீனியா புற்பூண்டுகளை மாத்திரம் அப்புறப்படுத்தும்
வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போகின்றார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் (தோணாவில்
நடைபெறும் வேலையைக் கண்டும் ஊழியர்களின் செயல்பாடுகளைப் பார்த்தும்) எழுந்து
நிற்கின்றது. இதற்கு புகைப்படங்களை ஆதாரமாகக் காணமுடியும்.
தோணாவில் உள்ள சல்வீனியா புற்பூண்டுகளை அகற்றுவதற்கு ஒரே ஒரு தோண்டுகின்ற இயந்திரத்தை
மட்டும் பாவித்து காலத்தையும் பணத்தையும் வீண் விரயம் செய்யாமல் இங்குள்ள
மீனவர்களின் படகுகள் சிலவற்றை வாடகை அடிப்படையில் பெற்று தொழிலாளர்களின் உதவியுடன்
சீக்கிரமாக சல்வீனியா புற்பூண்டுகளை இங்கிருந்து அப்புறப்படுத்த முடியும் என்ற கருத்து பிரதேசமக்களால்
தெரிவிக்கப்படுகின்றது. (ஒரே ஒரு தோண்டுகின்ற இயந்திரத்தை மட்டும் பாவித்து சல்வீனியா
புற்பூண்டுகளை அகற்றிக் கொண்டிருப்பதால் அந்த புற்பூண்டுகளை வேறு இடங்களுக்கு
கொண்டு செல்வதற்கு இரண்டு வாகனங்கள் காத்திருக்கின்றன. வாகனத்தில் ஏற்றுவதற்கு போதுமான
சல்வீனியா புற்பூண்டுகள் இல்லாததால் சாரதிகள் உறங்கிக்கொண்டிருப்பதையும் படங்களில்
காணலாம்.)
சாய்ந்தமருது படகு தரிப்பு நிலையம் உருவாக்கித் தருவோம் என
இப்பிரதேச மீனவர்களுக்கு அரசியல்வாதிகள் பலரால் வாக்குறுதி அளித்து ஏமாறப்பட்ட
அந்த இடத்தில்தான் சாய்ந்தமருது தோணா
புனரமைப்புத் திட்ட வேலைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றன என மீனவர்கள்
அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை அவ்விடத்தில் நின்று கொண்டு மீட்டுப்பார்த்து
கருத்துக்களைப் பரிமாரிக் கொள்கின்றனர்.
எமது பிரதேச மீனவர்கள் படகு தரிப்பு நிலையம் எனக்
காலத்திற்கு காலம் வாக்குறுதி அளிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டிருப்பது போன்று தோணா
புனரமைப்பு என்று கூறி சாய்ந்தமருது மக்களை ஏமாற்ற இடமளிக்கக்கூடாது. உண்மையாகவே தோணா புனரமைப்புக்கு 30 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தால் அத்தொகைப் பணத்தை
சரியான முறையில் பாவித்து தோணா புனரமைப்புச் செய்யப்படல் வேண்டும். (தோணா
புனரமைப்பு என இரண்டு முறை பல இலட்சம் ரூபா பணம்வீண் விரயமானது) இதற்கு இப்பிரதேச புத்திஜீவிகள் விழிப்பாக இருந்து செயல்படல் வேண்டும் என்பதே மக்கள் விருப்பமாகும்.
சாரதிகள் உறங்கிக் கொண்டிருக்கும் காட்சி |
ஒரே ஒரு தோண்டும் இயந்திரம் சல்வீனியா புற்பூண்டுகளை அள்ளும் காட்சி. |
0 comments:
Post a Comment