3 கல்லூரிப் பட்டங்களைப் பெற்று
11 வயதில் சிறுவன் சாதனை


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாக்ரமென்ட்டோ பகுதியில் வசிக்கும் பிஜோ ஆபிரகாம் (சாப்ட்வேர் என்ஜினீயர்) - டாக்டர் தாஜி ஆபிரகாம் தம்பதியரின் மகன் தனிஷ்க் ஆபிரகாம். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுவனான தனிஷ்க் ஆபிரகாம், இந்த இளம் வயதிலேயே கணிதம், அறிவியல், வேற்றுமொழிப் பாடம் உள்ளிட்ட மூன்று பாடங்களில் கல்லூரிப் பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ளான்.
அடிப்படையாக பள்ளிக் கல்வி பெறாமல் வீட்டில் இருந்தவாறு பாடம் பயின்ற தனிஷ்க், தனது ஏழாம் வயதில் உயர்நிலைப்பள்ளி இறுதியாண்டு தேர்வில் ஆஜராகி வெற்றி பெற்றான். அமெரிக்காவில் இந்த தனிப்பெரும் சிறப்பிடத்தை பிடித்த இவனது சாதனைப் பற்றி அறிந்த ஜனாதிபதி பராக் ஒபாமா, தனிஷ்க்கை பாராட்டி வாழ்த்துக் கடிதம் அனுப்பி இருந்தார்.
4 வயதாக இருந்தபோதே இவன் மென்சா என்று அங்கு அழைக்கப்படுகிற அறிவுத்திறன் சங்கத்தில் சேர்ந்தான்.
இப்போது பட்டம் பெற்றிருப்பது குறித்து டி.வி. ஒன்றில் பேட்டி அளித்த இந்த மழலை மேதை, ‘‘கல்லூரியில் படித்து பட்டம் பெறுவது என்பது என்னைப் பொறுத்தவரையில் ஒரு பெரிய விஷயம் இல்லை’’ என்று தெரிவித்துள்ளான்.
எதிர்கால திட்டம் பற்றி அவன் குறிப்பிடுகையில், ‘‘நான் ஒரு டாக்டர் ஆக விரும்புகிறேன். மேலும், மருத்துவ ஆராய்ச்சியாளராகவும் விளங்க விரும்புகிறேன். அது மட்டுமல்ல, அமெரிக்காவில் ஜனாதிபதி பதவியையும் எட்டிப்பிடிக்க ஆசைப்படுகிறேன்’’ என்று கூறியுள்ளான்.
தற்போது 11 வயது சிறுவனாக உள்ள தனிஷ்க், கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்கன் ரிவர் காலேஜில் சேர்ந்து அங்குள்ள சுமார் 1800 கல்லூரி மாணவர்களுடன் பயின்று, தற்போது 3 பாடங்களில் பட்டதாரியாக உயர்ந்துள்ளான்.
இந்த கல்லூரியின் வரலாற்றில் இத்தனை இளம்வயதில் ஒருவர் பட்டதாரியானது, இதுவே முதல்முறை என அமெரிக்கன் ரிவர் காலேஜ் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இவனது தங்கை தியாரா ஆபிரகாமும் ஒரு மழலை மேதை என்று அறிவிக்கப்படுகின்றது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top