முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உயர்பீட உறுப்பினர்களுக்கு............

29 வருடங்களுக்கு முன் ......

1987 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர்

மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஆற்றிய உரை.



1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கல்முனைக்குடியில்இக்பால் சனசமூக நிலையத்தால் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. ஆசிரியர் ஜனாப். எஸ்.ஆதம்பாவா தலைமை வகித்த இக்கருத்தரங்கில் பொதுமக்கள் பல மணி நேரமாகக் காத்திருந்து அன்னாரின் உரையை செவிமடுத்ததைக் குறிப்பிடல் வேண்டும்.

இக்கருத்தரங்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் சட்டத்தரணி  எம்.எச்.எம்.அஷ்ரப் பேசும் போது பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார்:-
தமிழ் மக்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட்டால், தமிழ் மக்களிடையே முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன என்பதற்கு போராளிகளின் சார்பாக பிரபாகரனோ அல்லது தமிழ் தலைவர்களோ உறுதியான  விளக்கம் ஒன்றையும் இதுவரையும் கூறவில்லை. இப்படியான நிலையில் நாம் எவ்வாறு தமிழ் பிரதிநிதிகளை நம்பியிருப்பது?.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம்  நியாயபூர்வமான ஒன்று என்பதை எமது முஸ்லிம் காங்கிரஸ் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்றது. ஆனால் தமிழ் மொழி பேசுவதன் காரணமாக முஸ்லிம் மக்களும் தமிழர்களே என்னும் கூற்றை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
முஸ்லிம் சமுதாயமும் சுய மரியாதையுள்ள சமூகம்தான். எங்களுக்கும் தமிழ், சிங்கள சகோதரர்களைப் போன்று அபிலாஷைகள் உள்ளன. எமது முஸ்லிம் சமுதாய மக்களின் நிலைப்பாட்டை நிர்ணயிப்பதற்கு நாங்களும் உரிமை பெற்றவர்கள்.
எடுக்கப்படும் எந்த ஒரு தீர்வும் தமிழ் மக்களைப் பாதித்து விடக்கூடாது என இந்திய அரசு தனது கவனத்தை தமிழ் மக்களுக்காக செலுத்திக் கொண்டிருக்கிறது. இதனைப்போன்று சிங்களச் சமூகத்தைப் பாதித்து விடுமா என இலங்கை அரசும் தனது கவனத்தைச் செலுத்துகின்றது.
ஆனால், மண்ணின் மைந்தர்களாகிய முஸ்லிம்களின் எதிர்காலத்தைப் பற்றி பேசுபவர்கள் யார்? இன்று நாம் அநாதரவாக விடப்பட்டுள்ளோம்.
முஸ்லிம்கள் மத்தியில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இனிமேலும் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்க முடியாது. நொண்டிச் சாட்டுகளும் கூறமுடியாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ ஒரு பிற்போக்கான தன்மையில் இனவாதத்தைக் கக்கும் கட்சியாக தற்போது செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் தனிக் கட்சியாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
எது, எப்படியிருப்பினும் எம்மைப் பொறுத்தவரையில் நிரந்தரத் தீர்வுக்கான உயர்மட்டப் பேச்சு வார்த்தைகள் எங்கெல்லாம் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் கிழக்கிழங்கை முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டும்.

எந்த தீர்வு மூலமாகவும் கிழக்கிழங்கை வாழ் முஸ்லிம்களின் அரசியல் பலம் பிரிக்கப்படக்கூடாது. முஸ்லிம்களுக்கென ஆகக்குறைந்த தீர்வு  அம்பாறை மாவட்டத்திலிருந்து அம்பாறைத் தேர்தல் தொகுதியைக் கழித்த தனி முஸ்லிம் மாகாணமாக அமைய வேண்டும். இதுவே எமது கோரிக்கையாகும். இக்கருத்தரங்கில் மெளலவி சம்சுதீன், மருதூர் கனி உட்பட பலரும் பேசினார்கள்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top