அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்
கட்சி யாப்பின் ஷரத்துக்களை
மீறி
ஒரு போலியான
பேராளர் மாநாடு
வை.எல்.எஸ்.
ஹமீட் குற்றச்சாட்டு
(எஸ்.அஷ்ரப்கான்,எம்.வை. அமீர்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன்
கட்சி யாப்பின் ஷரத்துக்களை மீறி ஒரு போலியான பேராளர் மாநாடு
ஒன்றைக் கூட்ட முற்படுகின்றார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம்
வை.எல்.எஸ். ஹமீட் குற்றம் சாட்டி உள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது தொடர்பாக கட்சி யாப்பின் ஸரத்துக்களை மீறி இவ்வாறான பிழையான
நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று அவருக்கு நான் எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக
அறிவித்துள்ளேன்.
இதேபோன்றுதான் அவர் முன்பும் கட்சியின் யாப்பை மீறி கூட்டம்
நடாத்துவதற்கு உரிய “கோரம்” இல்லாமல் கட்சியின் அதி உயர்பீட அங்கத்தவர்கள்
அல்லாதவர்களை கொண்டுவந்து கையொப்பம் வைக்க வைத்து, தேர்தல் ஆணையாளருக்கு போலியாக கடிதம்
எழுதியிருந்தார். அந்த விடயத்தில் பொய் தோற்று நீதியும் சத்தியமும் வென்றதை மக்கள்
அறிவார்கள்.
நேர்மை என்பது ஒரு மனிதனின் அடிப்படையிலிருந்து வர வேண்டும்.
ஆனால் தில்லு முல்லுகளை தன் இயற்கை குணமாகக் கொண்டவர்கள் சில காலம் மக்களை ஏமாற்றலாம். ஆனால் எக்காலமும் ஏமாற்ற
முடியாது.
சில சமூக வலைத்தளங்களும், சில ஊடகங்களும் தம் கை வசம் இருக்கின்றது
என்பதற்காக பொய்க்கும் அசத்தியத்திற்கும் உறை போட்டு அவற்றை உண்மையாகவும் சத்தியமாகவும்
மக்களுக்கு காட்ட முற்படுகின்ற முயற்சி நீண்ட காலம் பலிக்காது.
இந்தப் போலிக் கூட்டங்களைக் கண்டு கட்சியின் அங்கத்தவர்கள்,
ஆதரவாளர்கள் குழப்பமடையத் தேவையில்லை. கட்சியின் யாப்பை மீறிச் செய்கின்ற சதி நடவடிக்கைகளுக்கு
எதிராக கடந்த காலங்களில் எவ்வாறு சத்தியத்தின்
அடிப்படையிலும் சட்டத்தின் அடிப்படையிலும் இறைவனின் துணை கொண்டு முறியடித்தோமோ அவ்வாறே எதிர்காலத்திலும் இன்ஷா அல்லாஹ்
இவ்வாறான சதிகள் முறியடிக்கப்படும்.
அதேநேரம் கட்சியின் யாப்பை மீறுகின்றவர்களுக்கு எதிராகவும் அதற்குத்
துணை போகின்றவர்களுக்கு எதிராகவும் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் தேவையான
சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை மிகவும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்
என்றும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment