அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவர்
ஏ.எம்.ஜெமீல் அவர்களின் ஈதுல் பித்ர் வாழ்த்துச் செய்தி
முஸ்லிம் சமூகம் தனது பாதுகாப்பையும் உரிமைகளையும் உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்கு தூய சிந்தனையுடன் ஆக்கபூர்வமான முயற்சிகளை முன்னெடுக்க இன்றைய ஈகைத்திருநாளில் திடசங்கற்பம் பூணுவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஏ.எம்.ஜெமீல் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
“முஸ்லிம் சமூகத்தின் மீதான பேரினவாத கெடுபிடிகள் இன்னும் முற்றுப் பெறாமல் அங்கும் இங்குமாக தலைவிரித்தாடுகின்ற சூழ்நிலையில் சுயநலமற்ற, தூரநோக்கு சிந்தனையுடைய மாற்று அரசியல் சக்தியின் தேவை உணரப்படுவதனால் அத்தகைய சக்தியொன்றை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து எல்லோரும் சிந்திக்க வேண்டியுள்ளது.
தமது சுகபோகங்களுக்காக சமூகத்தை ஏமாற்றி வருகின்ற சக்திகளிடமிருந்து முஸ்லிம்கள் தம்மை விடுவித்துக் கொள்ளாத வரையில் முஸ்லிம் சமூகம் ஒருபோதும் தனது அபிலாஷைகளை அடைந்து கொள்ள முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பள்ளிவாசல்கள் மற்றும் சமய, கலாசார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், கல்வி, பொருளாதார துறைகளுக்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்கள் உடைத்தெறியப்பட வேண்டும், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும், தென்னிலங்கை முஸ்லிம்களின் அரசியல் இருப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், கிழக்கு முஸ்லிம்களின் காணிகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் பொதுவாக இந்நாட்டு முஸ்லிம்கள் தமது தாய் மண்ணில் அனைத்து உரிமைகளுடனும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான சூழ்நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும்.
ரமழான் மாதம் நமக்கு கற்றுத்தந்த படிப்பினைகள், சமூகம் வேண்டி நிற்கின்ற இத்தகைய சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்க உறுதுணையாக அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்” என்று கலாநிதி ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment