பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர்  உயிரிழந்த சம்பவம்தொடர்பாக

ஸ்ரீரங்காவைக் கைது! செய்ய சட்டமா அதிபரின்
ஆலோசனையை பெற பொலிஸார் தீர்மானம்?


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவை கைது செய்ய சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற பொலிஸார் தீர்மானித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா ஓட்டிச் சென்ற வாகனம் ஏற்படுத்திய விபத்தில் அவரது பாதுகாப்பாளரான பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர்  உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவே இத்தீர்மானத்திற்கு பொலிஸார் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது..
இதன் பின்னர், உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தரே வாகனத்தை ஓட்டிச் சென்றதாக பொலிஸ் பதிவுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட சில பொலிஸ் அதிகாரிகள், விபத்தை மறைத்த குற்றத்திற்காக ஸ்ரீரங்காவை கைது செய்ய பொலிஸார், சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
ஸ்ரீரங்காவை கைது செய்ய போதுமான சாட்சியங்கள் இருந்தும் சம்பவம் நடந்து 5 வருடங்கள் கடந்துள்ளதால், சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற தீர்மானித்ததாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி நடந்தது. இதில் ஸ்ரீரங்காவின் பாதுகாப்புக்கு இணைக்கப்பட்டிருந்த புஷ்பகுமார என்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் பலியானார்.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தரே வாகனத்தை செலுத்தியதாகவும் விபத்துக்கு அவரது தவறு காரணமாக ஏற்பட்டதாகவும் பொலிஸ் அப்போது கூறியிருந்தனர்.
சம்பவத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு சிராய்வு காயம் கூட ஏற்படவில்லை.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் மனைவி தனது கணவர் வாகனத்தை ஓட்டிச் செல்லவில்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரே வாகனத்தை ஓட்டியதாகவும் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
கணவர் இறந்ததன் காரணமாக தனக்கும் பிள்ளைக்கும் வசிக்க வீடு ஒன்றை கட்டித் தருவதாக ஸ்ரீரங்கா உறுதியளித்த போதிலும் அதனை நிறைவேற்ற வில்லை எனவும் அவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடத்துமாறு கூறி முன்னாள் பொலிஸ் மா அதிபர் வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாட்டை அனுப்பியிருந்தார் என்றும் இதன் பின்னர், இந்த முறைப்பாடு வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் விபத்து நடந்த நேரத்தில் வாகனத்தை ஓட்டியது பொலிஸ் உத்தியோகஸ்தர் அல்ல என தெரியவந்துள்ளதாகவும் வாகனத்தை ஸ்ரீரங்காவே ஓட்டி சென்றதாகவும் விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
விபத்துச் சம்பவத்தை அடுத்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பாலசூரியவின் உத்தரவின் பேரில், ஸ்ரீரங்காவை பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துச் சென்றதாக செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தின் அன்றைய பொறுப்பதிகாரி வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து நடந்த நேரத்தில் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த மேலும் சில அதிகாரிகள் வாகனத்தில் பயணம் செய்துள்ளனர். ஸ்ரீரங்காவே வானத்தை ஓட்டியதாக இவர்களும் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top