வடக்கு-கிழக்கு மீளிணைப்பு!
முஸ்லிம்களிடம் எடுபடுமா சம்பந்தனின் கோரிக்கை?


தமிழ்-,முஸ்லிம் மக்களுக்குப் பெரும் சாபக்கேடாக இருந்து வந்த மஹிந்தவின் ஆட்சி கவிழ்ந்தது முதல் இந்த  மக்கள் ஓரளவு நிம்மதிப் பெரு மூச்சை சுவாசிக்கத் தொடங்கினார்கள் என்றால் அதை மறுப்பதற்கில்லை.முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பேரினவாதம் ஓரளவு முடிவுக்கு  வந்தது.தமிழர்களின் ஓரிரு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டன.
அதேபோல்,இந்த வருடத்துக்குள்  அரசியல் தீர்வு  வழங்கப்படும் என அரசு அரசு அறிவித்துள்ளமையால்  இந்த வருடத்தையும் மேலும் நம்பிக்கையூட்டும் வருடமாக  சிறுபான்மை இன மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றனர்.அது அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக-தமிழ்-முஸ்லிம் மக்களை ஒன்றிணைக்கக்கூடிய தீர்வாக அமைய வேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பமாகும்.
ஓரினத்துக்கு வழங்கப்படும் தீர்வு இன்னோர் இனத்தைப் பாதிக்காதவகையில் அமைந்தால் மாத்திரமே  மேற்கூறப்பட்ட விடயம் சாத்தியப்படும்.ஆனால்,தீர்வுத் திட்டத்தின் முக்கிய அங்கமாகக் கோரப்படும் வடக்கு-கிழக்கு மீளிணைப்பு என்ற விவகாரம் தமிழ்-முஸ்லிம் உறவைப் பாதிக்கக்கூடிய ஒன்றாகவும் ஒட்டுமொத்த அரசியல் தீர்வு நடவடிக்கைகளையும் குழப்பிவிடும் ஒன்றாகவும்  இன்று பார்க்கப்படுகின்றது.

இது  தொடர்பில் இரண்டு இனங்களும் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.அந்த முடிவுகள் உள்ளடக்கப்பட்டதாக அரசியல் தீர்வு அமையும் பட்சத்தில்தான் தீர்வு நீண்ட ஆயுளைக் கொண்டதாக அமையும்.
இந்த வடக்கு-கிழக்கு மீளிணைப்பை தமிழர்கள் அரசியல் தீர்வில் உள்ளடக்கப்பட வேண்டிய  முதல்தரக் கோரிக்கையாக முன்வைத்து  நிற்கின்றபோதிலும்,முஸ்லிம்கள் அது தொடர்பில் மாறுபட்ட நிலைப்பாட்டிலேயே  உள்ளனர்.
குறிப்பாக,கிழக்கு முஸ்லிம்கள் மீளிணைப்பை விரும்பவில்லை.சந்தேகக் கண் கொண்டே அதை பார்க்கின்றனர்.ஒருவேளை,மீளிணைக்கப்படால் முஸ்லிம்களுக்குத் தனியான நிர்வாக அலகு வழங்கப்பட வேண்டும் என்பதே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினது  நிலைப்பாடாகும்.
இணைந்த வடக்கு-கிழக்கிற்குள் முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரம் குறைந்து அதனால்,முஸ்லிம்களுக்கு அரசியல்ரீதியாக சில இழப்புகள் ஏற்படக்கூடும் என முஸ்லிம்கள்  அஞ்சுகின்றனர்.
குறிப்பாக,வடக்கு-கிழக்கு மீளிணைக்கப்பட்டால் கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வருகின்ற வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்ற அச்சமே முஸ்லிம்களிடம் அதிகமாக இருக்கின்றது.
மீளிணைப்பை எதிர்ப்பதற்கு இதைத் தவிர வெறெந்தக் காரணமும் முஸ்லிம்களிடம் இல்லை.இந்த நிலையில்,மீளிணைப்புக்கான முஸ்லிம்களின் ஒத்துழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும்  ஒரு தடவை கோரியுள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நேற்று முன்தினம் கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.
 வடக்கு-கிழக்கில் சிறுபான்மை இன மக்களின் பெரும்பான்மையைப் பாதுகாக்கும் நோக்கில்தான் வடக்கு-கிழக்கு மீளிணைப்பை கூட்டமைப்பு கோருகின்றது என்றும் தமிழ் முதலமைச்சரைப் பெற்றுக்கொள்ளும்  நோக்கில் அதைக் கோரவில்லை என்றும் பக்குவமான முஸ்லிம் முதலமைச்சரை நியமிப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் சம்பந்தன் அங்கு கூறி இருந்தார்.
வடக்கு-கிழக்கு மீளிணைப்பை முஸ்லிம்கள் எதிர்ப்பதற்கான காரணத்தை  தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்கு விளங்கிய வைத்துள்ளது என்பது சம்பந்தனின் இந்தக் கூற்றில் தெரிகின்றது.சம்பந்தன் தெரிவித்துள்ள இந்த விடயங்களுடன் முஸ்லிம்கள் உடன்படுகின்றார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
வடக்கு-கிழக்கில் சிறுபான்மை இன மக்களின் பெரும்பான்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம்களுக்கும் அக்கறை உண்டு.அந்த அக்கறைக்காக தமது இனத்தின் விகிதாசாரத்தைக் குறைத்துக் கொள்வதா என்பதுதான் முஸ்லிம்களின் கேள்வியாகும்.
முக்கியமாக,வடக்கில் தமிழ் முதலமைச்சரும் கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரும் இருக்க வேண்டும் என்ற முஸ்லிம்களின் விருப்பத்துக்கு ஏற்ப வடக்கு-கிழக்கின் அரசியல் முன்னெடுப்புகள் அமைய வேண்டும் என்பதே முஸ்லிம்களின் நிலைப்பாடாகும்.
அதற்கு ஏற்ப கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் இருப்பதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்று சம்பந்தன் தெரிவித்திருப்பதானது வடக்கு-கிழக்கு மீளிணைப்பு தொடர்பில் முஸ்லிம் தரப்புகளுடன்  பேச்சுக்களை நடத்துவதற்கான வழியை இலகுபடுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.தற்போதைய கிழக்கின் முதலமைச்சர் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றவர் என்பதும்  குறிப்பிடத்தத்தக்கது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் முஸ்லிம் கடசிகளுடனும் இயக்கங்களுடனும் பேச்சுக்களை நடத்த வேண்டும்.முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுகின்ற சந்தேகங்கள் நீக்கப்படாமல்-அவர்களுடன் பேச்சுக்களை நடத்தாமல் வடக்கு-கிழக்கு மீளிணைப்பு பற்றி பேசுவதில்-அதற்காக முஸ்லிம்களிடம் ஒத்துழைப்புக்  கோருவதில் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

முஸ்லிம்கள் விரும்பினால்கூட வடக்கு-கிழக்கு மீளிணைப்பு சாத்தியப்படுமா என்ற கேள்வி இருக்கின்ற நிலையில்,இரண்டு சமூகங்களும் ஒன்றிணைந்து செயலாற்றுவதுதான் சரியான வழியாகும்.வடக்கு-கிழக்கு மீளிணைப்பு மாத்திரமன்றி ஒட்டுமொத்த அரசியல் தீர்வு விடயத்திலும்-அதை சாத்தியமாக்குவதிலும் இரண்டு சமூகங்களும் ஒன்றிணைந்தே நிற்க வேண்டும்.
இரண்டு இனங்களின்  பிரச்சினைகளும் விரிவாக ஆராயப்பட வேண்டும்;அவற்றுக்கான தீர்வுகள் முன்மொழியப்பட வேண்டும்.அந்தத் தீர்வைப் பெறுவதற்கான பயணத்தை இரண்டு இனங்களும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
தீர்வு வெளிச் சக்திகளால்  திணிக்கப்பட்டால் அது தமிழருக்கும் பாதகமாக அமையலாம்;முஸ்லிம்களுக்கும் பாதகமாக அமையலாம்.அதுபோக,இரண்டு இனங்களும் வரலாற்று நெடுகிலும் மனக்கசப்புடன்-வேற்றுமையுடன் வாழும் நிலையும்  ஏற்படலாம்.அவ்வாறு நடந்தால் அது அரசியல் தீர்வாக அமையாது;இருக்கின்ற பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கச் செய்யும் ஒரு பொறிமுறையாகவே அது பார்க்கப்படும்.
வடக்கு-கிழக்கு மீளிணைப்பானாலும் சரி ஒட்டுமொத்த அரசியல் தீர்வானாலும் சரி  அவை மேற்படி இரண்டு இனங்களும் ஒன்றிணைந்து எடுக்கும் இணக்கப்பாட்டின் அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்ற உண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் நடைமுறையில் ஒன்றிணைந்து செயற்படுவதாக தெரியவில்லை.கொள்கையளவில் மாத்திரம்தான்  அது உள்ளது.
ஆகவே,அரசியல் தீர்வு முயற்சியை சிக்கலாக்கிக் கொண்டிருக்கும் இந்த வடக்கு-கிழக்கு மீளிணைப்பு விவகாரம் முதலில் பேசித் தீர்க்கப்பட வேண்டும்.அதனைத் தொடர்ந்து ஏனைய பிரச்சினைகளும் ஆராயப்பட்டு அவற்றுக்கான தீர்வைக் கண்டறிந்து அவற்றின் அடிப்படையில் நிலையான-உறுதியான -மூவின மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு பிறப்பதற்கு வழி சமைக்க வேண்டும்.
[எம்..முபாறக் ]


1 comments:

  1. When Muslims chased out taking property and welath where was TNA did they take any step to resettle them instead their parliamentarians oppose Muslim resettlement first TNA settle those refuges on their own land then talk under your Np council did not do anything how can believe you come behind you mind it majority Sinhalese community peace loving and friendly with Muslim don't try to spoil their mind

    ReplyDelete

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top