தலை ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள்
பிரித்தெடுக்க பெற்றோர் விருப்பம்

தெலுங்கானாவில் தலை ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளை பிரித்தெடுக்க 12 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் முரளி மற்றும் நாகலட்சுமி தம்பதியருக்கு 2003 ஆம் ஆண்டு, இரட்டை பெண் குழந்தைகள் தலை ஒட்டிப்பிறந்தன.
அதைத் தொடர்ந்து 12 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் ஐதராபாத் ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள நிலோபர் அரசு மருத்துவமனையில் வைத்து பராமரிக்கப்படுகிறார்கள்.
அவர்களை பிரித்தெடுப்பதற்கு சுமார் ரூ.10 கோடி செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அந்த அறுவைசிகிச்சை வெற்றி பெறுமா என்று உறுதியாக கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து பிரித்தானியா, சிங்கப்பூர் என சர்வதேச அளவில் பல நாடுகளில் இருந்து மருத்துவர்கள் வந்து வீணா, வாணி என்னும் இந்த இரட்டை சகோதரிகளை பார்த்து சென்றுள்ளனர்.
ஒட்டிப்பிறந்த தங்கள் மகள்களை அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுக்க பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு தேவையான நிதி உதவி அளித்து உதவுமாறு தெலுங்கானா மாநில அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் நிலோபர் மருத்துவமனை நிர்வாகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடவுள்தான் இப்படி அவர்களை படைத்து விட்டார். வீணா, வாணிக்கு லண்டனிலோ, அவுஸ்திரேலியாவிலோ, அமெரிக்காவிலோ றுவைசிகிச்சை செய்து, அவர்களை பிரித்தெடுத்து, தங்களிடம் ஒப்படைத்து உதவுமாறு அரசாங்கத்தை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம் என கூறி உள்ளனர்.
இந்த இரட்டை சகோதரிகளை இந்திய மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா, ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்தார். அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘இந்த குழந்தைகளுக்கு கல்வியும், பெற்றோருக்கு வீடும், வேலைவாய்ப்பும் தர மத்திய அரசு பரிசீலிக்கும்’’ என கூறியுள்ளார். மாநில அரசும் பரிசீலிப்பது குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top