ஏறாவூர் இரட்டைக் கொலை

அறுவருக்கும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிப்பு

ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 06 சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 19ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் மாவட்ட மேலதிக நீதிபதி எம்..எம்.றிஸ்வி முன்னிலையில் இச்சந்தேக நபர்களை இன்று புதன்கிழமை ஆஜர்படுத்தியபோதே, அவர் இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதியை அண்டியுள்ள தங்களின் வீட்டில் வசித்துவந்த தாயான  நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள்  கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி  மீட்கப்பட்டன. இக்கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்படி 6 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டு, இன்று புதன்கிழமைவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையிலேயே, இவர்களுக்கான விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பின் ஒழுங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது பாஹிர் (வயது 24- கொல்லப்பட்ட பெண்ணின் கணவனுடைய சகோதரன்), அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த வசம்பு என்றழைக்கப்படும் உஸனார் முஹம்மது தில்ஷான் (வயது 29), பாடசாலை வீதி மீராகேணியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் அஹம்மது றாசிம் (வயது 23), பள்ளியடி வீதி, காவத்தமுனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது அஸ்ஹர் (வயது 23), ஏறாவூர் நகர் போக்கர் வீதியைச் சேர்ந்த இஸ்மாயில் சப்ரின் (வயது 30), மற்றும் ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது பிலால் (வயது 50) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.


இச்சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்ட வேளை நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top