நான் கட்சியை விட்டு
தூரமாக இருந்தாலும் விலகவில்லை:
கல்முனை முன்னாள் மேயர்
சிராஸ் மீராசாஹிப்
கடந்த முறை அ.இ.ம.கா சார்பாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கல்முனை முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிபுக்கு அ.இ.ம.காவினால் அசோக் லேய்லன்ட் நிறுவனத்தின் தவிசாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவரிடம் வினவிய போது,
கடந்த பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து தான் சில காலம் கட்சியை விட்டு தூரமாக இருந்தாலும் அதனை விட்டு விலகவுமில்லை அதற்கு எதிராக ஒரு போதும் செயற்படவுமில்லை.
நான் தூரமாகவிருந்த காரணத்தை அ.இ.ம.காவின் தலைவர் றிஷாத் பதியுதீன் நன்கே அறிவார். அதே போன்று அவர் என் விடயத்தில் செயற்பட்டதன் உண்மைக் காரணத்தையும் நான் நன்கே அறிவேன்.
என்னை நோக்கி மு.காவின் பல தூதுகள் வந்தடைந்தாலும் அவற்றிற்கு செவி சாய்க்க என் மனம் ஒரு போதும் விரும்பவில்லை.
நான் மு.காவிலிருந்து விலகிச் சென்று அமைச்சர் றிஷாத்துடன் தொடர்பிலிருந்தேன். அப்போதே அவருடன் தான் அரசியலில் பயணிக்கவும் விரும்பினேன். அந் நேரத்தில் அவர் அம்பாறையில் கால் பதிக்காததன் காரணமாக அவரின் அனுமதியோடு வேறு வழியின்றியே முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வுடன் இணைந்து செயற்பட்டேன். அமைச்சர் றிஷாத் அம்பாறை மாவட்டத்திற்கு வந்ததும் அவருடன் இணைத்து செயற்பட்டேன். எனக்கு இக் கட்சியை விட்டுச் செல்லும் எண்ணம் ஒரு போதும் இருக்கவுமில்லை ஒரு போதும் எழப்போவதுமில்லை.
சாய்ந்தமருதில் அ.இ.ம.கா. தொடர்பான அனைத்து முடிவுகளையும் என்னையும் ஜெமீலையும் மஷூரா அடிப்படையில் முடிவெடுத்து செயற்படுமாறு அமைச்சர் றிஷாத் பணித்துள்ளார். எதிர்காலத்தில் நாங்கள் இருவரும் இணைந்து அ.இ.ம.காவின் வெற்றிக்காக செயற்படவுள்ளோம்.
நான் மீண்டும் நூறு வீதம் எனது கட்சியான அ.இ.ம.காவுடன் உள ரீதியாக இணைந்து அதன் நாடு தழுவிய அரசியல் போராட்டத்திலும் பங்கு கொள்ளவுள்ளேன் எனக் கூறினார்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
0 comments:
Post a Comment