இலங்கை கல்வி நிருவாக சேவையின்

 முதலாம், இரண்டாம் சேவை மூப்புப்பட்டியல்

கல்வியமைச்சால் இற்றைப்((ஒழுங்கு)படுத்தப்படவில்லை

(அஸ்லம்)


இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம், இரண்டாம் வகுப்புக்களுக்கான சேவை மூப்புப்பட்டியலை கல்வியமைச்சு இற்றைப்படுத்தாத நிலையில் வைத்திருப்பதாகவும் இதன் காரணமாக பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாகவும் இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை கல்வி நிருவாக சேவையின் சேவை மூப்புப்பட்டியல் கல்வியமைச்சின் இணையத்தளம் மூலமாக இறுதுயாக 2016 மே மாதம் வெளியிடப்பட்டது. இவ்வாறு வெளியிடப்பட்ட பட்டியலில் ஓய்வு பெற்றுச் சென்றோர் மற்றும் சேவையில் இல்லாத உத்தியோகத்தர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

அரசாங்க சேவை ஆணைக்குழுவின் 1490/21  ம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ஒவ்வொரு ஆறுமாதங்களுக்கு ஒருதடவை மேற்படி சேவை மூப்புப்பட்டியல் இற்றைப்படுத்தப்பட வேண்டும். இதற்கான படிவங்களை சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு கல்வி அமைச்சு அனுப்பி தகவல்களை பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆயினும், தகவல்கள் இற்றைப்படுத்தப்படாமையால் சம்பளமற்ற லீவினை பெற்றோர் சேவையில் உள்ளோரை விட முன்னிலையில் உள்ளனர். இதன் காரணமாக சேவையில் உள்ளோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறுதியாக வெளியிடப்பட்ட சேவை மூப்புப்பட்டியலில் இலங்கை கல்வி நிருவாக சேவை இரண்டாம் வகுப்பில் சேவையில் இருப்போரை விட ஓய்வு பெற்றோரின் பெயர்களே அதிகமாகவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அரசாங்க தாப விதிக்கோவை, அரச சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிக்கோவை என்பன நியமனங்கள், பதவி உயர்வுகள் என்பவற்றில் சேவை மூப்பு முக்கியமானதாக கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்ட போதிலும் மாகாண சபைகள் மட்டத்தில் கல்வித்துறை நியமனங்களின் போது இலங்கை கல்வி நிருவாக சேவையின் சேவை மூப்புப்பட்டியல் கவனத்தில் கொள்ளப்படுவதில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை நிருவாக சேவை சேவை மூப்புப்பட்டியல் இணையதளத்தில் பேணப்படுவது போன்று இலங்கை கல்வி நிருவாக சேவை மூப்புப்பட்டியல் கல்வியமைச்சின் இணையத்தளத்தில் பேணப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டும் சுமத்தப்படுகிறது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top