ஞானசார தேரர் விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர்

காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

பிரதி அமைச்சர்எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவிப்பு



முஸ்லிம் இளைஞர்கள் கொதிப்படைந்து பெரும் அகிம்சை ரீதியான போராட்டத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு சூழலை ஞானசார தேரர் இன்று உருவாக்கி இருக்கின்றார். எனவே இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடிக் கவனமெடுத்து காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எ விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளரும் கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வருமான சட்ட முதுமாணி ஜனாதிபதி சட்டத்தரணி. நிஸாம் காரியப்பரை பாராட்டி கௌரவிக்கும் 'மண்ணுக்கு பெருமை சேர்த்த மகனுக்கு பாராட்டு விழா' கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.. அஸீஸ் தலைமையில் நேற்று (20) சனிக்கிழமை கல்முனை ஆஸாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றபோதுபிரதி அமைச்சர் ஹரீஸ்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சட்டத்தரணிகளின் அதி உச்ச ஆசையாகவும், அடைவாகவும் அமையும் ஜனாதிபதி சட்டத்தரணி என்னும் மகுடம் எமது பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர், சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கு சூடப்பட்டிருப்பது பெரும் அகமகிழ்வைத் தருகிறது.
இவரின் தொழில் வாண்மைக்கு கிடைத்த கிரீடமாக இது அமைகிறது, இதனைப் பெற்றுக்கொள்வதற்கான முழுத் தகுதியும் திறமையும் உடையவராக இவர் காணப்படுகிறார். இவருக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டவர்கள் என்றுதான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும், ஆனால் அவர்கள் நாட்டின் சட்டத்தை உருவாக்குபவர்கள் என்பதை அதிகமான கல்விமான்கள் அறிவார்கள். அந்தவகையில் சட்டங்களை இயற்றுகின்ற சில சந்தர்ப்பங்களில் தேசிய நலனை கருத்திற்கொண்டு மனச்சாட்சியை கட்டி வைத்து விட்டு சில சட்டங்களை இயற்ற ஆதரவு வழங்க வேண்டிய சூழ்நிலையிலும் இருந்திருக்கின்றோம்.
இந்தவகையில் 19 வது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் சுயாதீன ஆணைக்குழுவாக மாறுகின்றபோது நாட்டில் இருக்கின்ற வஞ்சிக்கப்பட்ட அநீதியிழைக்கப்பட்ட மக்களுக்காக சுயாதீனமாக நீதியை நிலைநாட்டுகின்ற ஒரு திணைக்களமாக மாறும் என்று தற்போதைய நல்லாட்சியாளர்களால் கூறப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தது. இவ்வாறு மாற்றம் பெறும்போது பல ஆபத்துக்கள் இருக்கின்றது, எதிர்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இது திரும்பக்கூடும் என அன்று தலைவரிடம் கூறினேன்.
மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படுகின்ற அரசியல்வாதியான ஜனாதிபதி அல்லது பிரதமரின் கையில் அவ்வதிகாரம் முழுமையாக இருக்கின்றபோதுதான் எங்களுடைய சமூகத்தின் வாக்கு அவர்களுக்கு தேவை என்ற அடிப்படையில் பொலிஸாருடன் தொடர்புடைய எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பார்கள் என்ற விடயத்தை கூறியிருந்தேன். அக்காலகட்டத்தில் இதுதொடர்பில் விவாதித்தும் இருந்தோம்.
இன்று என்ன நடக்கின்றது?. அரசியல் யாப்பிலும் நீதித்துறையின் இயற்கை நீதியிலும் சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று காணப்படுகிறது. அந்தவகையில் 19வது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு இருந்த சில சிறப்பு விதிகள் குறைக்கப்பட்டு தேவை ஏற்படின் அவரும் நீதிமன்றிக்கு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில் சில பௌத்த துறவிகளுக்கு மட்டும் சட்டம் விதிவிலக்காக ஆக்கப்பட்டுள்ளதா? என்று இன்று சிந்திக்க வேண்டியுள்ளது.
எந்த பொலிஸ் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படும் என்று கூறப்பட்டதோ அதன் தலைவர் இன்று நாட்டில் சில பௌத்த துறவிகள் நடாத்துகின்ற அராஜகத்தை கண்கூடாக கண்டபோதிலும், அது தொடர்பில் பொலிஸ் திளைக்களத்திலும் ஆணைக்;குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டபோதிலும் மௌனமாக இருக்கின்றார். எந்த கட்டத்திலும் தலையிட்டு பொலிஸ் மா அதிபர் இந்த குழப்பக் காரர்களை கைதி செய்யுமாறு உத்தரவிடவில்லை.
சட்ட ரீதியாகவோ அல்லது சட்ட ரீதியற்ற முறையிலோ மக்கள் குடியிருக்கின்றபோது அதற்கெதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு சில வரையறைகள் இருக்கின்றது. அந்தவரையறைகளை எல்லாம் மீறி பொலிசார் முன்நிலையில் குடியிருப்பு வீடுகள் ஜனாதிபதியின் மாவட்டத்தில் உடைக்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று அரசியலமைப்பில் கருத்துச் சுதந்திரம் இருந்தாலும் மத ரீதியாக ஏனைய மதங்களை நிற்தனை செய்கின்றபோது அதற்கெதிராக வழக்கிடக்கூடிய சக்தி பொலிசாருக்கு இருந்தும் இஸ்லாத்தை நிந்தனை செய்யும்வகையில் எம்மைப் படைத்த இறைவனை தூற்றி பேசியிருக்கும் வெறி நாய் ஞானசாரவை தடயங்கள், சாட்சிகள் இருந்தும் கைது செய்யாது பொலிஸ்மா அதிபர் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.  

பகிரங்கமாக இஸ்லாம் என்பது புற்றுநோய், இதை வேரறுக்க வேண்டும், இங்குள்ள சிறுபான்மை மக்களை வெளியயேற்ற வேண்டும் என்றெல்லாம் இனவாதமாக பேசிவருகின்றார். அத்தோடு இந்த நாட்டின் ஜனாதிபதியினால் கௌரவமாக நியமிக்கப்பட்ட அமைச்சர் மனோகனேசனுடைய அமைச்சுக்கு சென்று அவர் முன்பாகவே அவருடைய சமூகத்தை இழிவுபடுத்தி, அவரை அவமானப்படுத்தி செயற்படுகின்ற நிலமையில் கூட இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.
நான் சமூகத்திற்காக ஞனசார தேரரையும் அவரது இனவாத செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்களையும்  கண்டித்து பேசுவதோடு அவர்களுக்கெதிரான சில நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் ஈடுபட்டுவருகின்றேன். இதனால் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை என்னுடைய அமைச்சுக்கு வருகின்றபோது என்னால் மனோ கனேசன் போன்று இருக்க முடியாது.
எனவே தான் இவ்வாறான ஒரு சூழலில் இது தொடர்பான சடட ரீதியான விடயத்தில் சட்டத்தரணிகளின் வகி பாகம், சட்டம் இயற்றுபவர்களின் வகிபாகம் என்பவற்றை இன்று சமூகம் பெரும் எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றது.
இது சம்பந்தமாக எங்களுடைய தலைவர் உள்ளிட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் முஸ்லிம் காலாசார அமைச்சில் கூடி பேசியிருக்கின்றார்கள். இது சம்பந்தமாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை கூடிய விரைவில் சந்தித்து இந்த நாட்டில் சட்டத்தை கையில் எடுக்கின்ற அந்த கும்பலை அடக்கும்வகையில் சந்திரிகா கடந்த காலத்தில் கூறியது போல் நாயை இழுத்துக் கொண்டு போய் அடைப்பது போன்று இந்த ஞனசாரவை அடைக்குமாறு கோரவுள்ளோம்.

இன்று சந்திரிக்கா அவர்கள் இது தொடர்பில் மௌனமாக இருப்பது தொடர்பில் கேள்விகளை தொடுக்கின்ற விடயமாக மாறுவதோடு எமது இளைஞர்கள் கொதிப்படைந்து பெரும் அகிம்சை ரீதியான போராட்டத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு சூழல் இன்று உருவாகி இருக்கின்றது எனவே இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top