நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு
தமிழ் நாட்டிலுள்ள 3000 பள்ளிவாசல்களுக்கு 4,500 மெட்ரிக் தொன்அரிசி:
தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு


புனித ரமளான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு பள்ளிவாசல்களுக்குத் தேவையான 4 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் அரிசி வழங்குவதற்கு   முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள எனது தலைமையிலான தமிழக அரசு, அவர்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், இஸ்லாமிய மக்கள் புனித ரமளான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க எனது முந்தைய ஆட்சி காலத்தில், அதாவது 2001-ம் ஆண்டு நவம்பர் 9-ஆம் திகதி அன்று நான் ஆணையிட்டிருந்தேன். அதன்படி, பள்ளிவாசல்களுக்கு அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இது இஸ்லாமிய பெருமக்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்ற ஆண்டுகளைப் போலவே, இவ்வாண்டும் ரமளான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசியை வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. இஸ்லாமிய மக்களின் கோரிக்கையினை ஏற்று, இந்த ஆண்டும் புனித ரமளான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக மொத்த அனுமதி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.
ஆவணங்களை உரிய ஆய்வு செய்து பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 4 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும்.
இதன் மூலம், மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயன் அடையும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top