மற்றொரு அனர்த்தத்திற்கு தூபமிடும் பொது பலசேனாவின் கொழும்பு நிகழ்வு;

தடுக்கக் கோருகிறார் ஏ.எம்.ஜெமீல்!


(அஸ்லம் எஸ்.மௌலானா)


"தலைமைத்துவப் பயிற்சி" எனும் போர்வையில் பொதுபல சேனா ஏற்பாடு செய்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்வை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான .எம்.ஜெமீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
"மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப் பின்னர் நாட்டில் அமைதியான சூழல் ஒன்று நிலவி வந்த நிலையில் தம்புள்ளை பள்ளிவாசல் மற்றும் ஹலால் விடயங்களை மையப்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறிப் போராட்டத்தை ஆரம்பித்த பொது பல சேனா உள்ளிட்ட பௌத்த தீவிரவாத இயக்கங்கள் கடந்த இரு வருட காலத்தில் முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும் புனித இஸ்லாம் மார்க்கத்தையும் இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டு நாட்டையும் முஸ்லிம் சமூகத்தையும் அச்சமான சூழ்நிலைக்குள் தள்ளி விட்டுள்ளன.
அதன் தொடராக கடந்த 15ஆம் திகதி அளுத்கம, தர்கா நகரில் பாரிய இன வெறியாட்டத்தை மேற்கொண்டு முஸ்லிம்களின் உயிர்களையும் இருப்பிடங்களையும் பொருளாதாரத்தையும் அழித்தொழிக்கும் போர் ஒன்றை தொடக்கி வைத்து நாட்டின் பல பாகங்களிலும் இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இதனால் முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ள நிலையில் அவர்கள் பாரிய அச்சத்துடன் வாழ்வியல் உத்தரவாதமின்றி திண்டாடுகின்றனர். இந்நிலையில் நாளை 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் தலைமைத்துவப் பயிற்சி எனும் போர்வையில் பொதுபல சேனா நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.   
இது மற்றொரு அனர்த்தத்திற்கான திட்டமீட்ட ஏற்பாடு என்றே கருத வேண்டியுள்ளது. 
குறிப்பாக கொழும்பு மாவட்ட முஸ்லிம்களை இலக்கு வைத்து இப்படியொரு நிகழ்வுக்கு சிங்கள இளைஞர்களை பொது பல சேனா அணி திரட்டுவதாக சந்தேகிக்கப்படுகிறது.
ஆகையினால் இந்நிகழ்வை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அது பாரிய அனர்த்தம் ஒன்றுக்கு வழி வகுக்கலாம என அஞ்சப்படுகிறது.
ஏனெனில் அளுத்கம நிகழ்வும் இவ்வாறுதான் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பொது பல சேனாவின் பொதுக் கூட்டத்திற்கு தடை விதிக்குமாறு முஸ்லிம் அரசியல் தலைமைகளும் சிவில் சமூக அமைப்புகளும் அரசிடம் கோரிக்கை விடுத்த போதிலும் அது கணக்கில் கொள்ளப்படவில்லை. ஆனால் போது பல சேனாவின் பொதுக் கூட்டம் பேரணியாக உருவெடுத்து முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளாக வெடித்ததை எவரும் மறுக்க முடியாது.
இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனைத்தும் கூட்டிணைந்து செயற்படுவது காலத்தின் தேவையாக மாறியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒன்றுபடாத முஸ்லிம் தலைமைகள் இனியொரு போதும் ஒற்றுமைப்பட வாய்ப்பில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றேன்.
இன்று இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் சர்வதேச மயப்பட்டிருக்கின்றன. அரபு, முஸ்லிம் நாடுகள் இலங்கை முஸ்லிம்கள் மீதான நெருக்கடிகள் தொடர்பில் கூடிய கரிசனையுடன் எமது நாட்டு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன. இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு (OIC) .நா.மனித உரிமைகள் பேரவை என்பன என்றுமில்லாதவாறு இலங்கை வாழ் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் சர்வதேச மயப்படுவதற்கு முப்பது வருடங்களுக்கு மேல் சென்றுள்ளது.அதற்காக தமிழ் சமூகம் பாரிய அழிவுகளை சந்தித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான உயிர்களை தியாகம் செய்திருக்கிறது. தமது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் இன விடுதலைப் போராட்டத்திற்காக விலை கொடுத்திருந்தது. அந்த சமூகம் 1983 ஜூலைக் கலவரம் தொடக்கம் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேல் அனைத்தையும் இழந்து- இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலைக்கு வந்தே இன்று சர்வதேசத்தின் அனுசரணையைப் பெற்றிருக்கிறது.
ஆனால் முஸ்லிம் சமூகம் இன்னும் அப்படியொரு பேரிழப்புக்கு முகம் கொடுத்திராத நிலையில் குறுகிய காலத்திற்குள்ளேயே சர்வதேசத்தினதும் முஸ்லிம் நாடுகளினதும் கவனத்தை ஈர்த்துள்ளோம். அதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமைத்துவமும் முன்னெடுத்து வருகின்ற ராஜதந்திர நடவடிக்கைகளே காரணம் என்றால் அது மிகையாகாது.
இந்நிலையில் முஸ்லிம் தலைமைகள் அனைத்தும் கூட்டிணைந்து செயற்படுமாயின் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நமது குரல் இன்னும் பலமடையும் என்பதில் சந்தேகம் கிடையாது. அதன் மூலம் நமது முஸ்லிம் சமூகத்தின் விடுதலைப் போராட்டம் இன்னும் வலுவடையும் என்று நான் திடமாக நம்புகின்றேன்.
தேர்தல் காலங்களில் போட்டி அரசியலைப் பார்த்துக் கொள்ளலாம். தற்போது முஸ்லிம்கள் முகம் கொடுத்துள்ள பேரின நெருக்கடிகளில் இருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்காக அரசியல் பேதங்களுக்கு அப்பால் அனைத்து முஸ்லிம் தலைமைகளும் கைகோர்த்து செயற்படுவது அவசியம் என உணர்த்தப்படுகிறது. அதனை எவரும் தட்டிக் கழித்து விட முடியாது.

நமது சமூகம் அனைத்தையும் இழந்து மாய்ந்த பின் நாம் எத்தளத்தில் நின்று அரசியல் செய்யப் போகிறோம் என்பதை ஒவ்வொரு அரசியல் வாதியும் சிந்திக்க முன்வர வேண்டும். ஆகையினால் முஸ்லிம் சமூகத்தின் இன்றைய பிரச்சினைகளைக் கையாள்வதற்கு தனிப்பட்ட அரசசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு முன்வருமாறு அனைத்து அரசியல் தலைமைகளுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுக்கின்றேன்" இவ்வாறு  ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top