கல்முனை மாநகர சபை சுகாதார சேவைகளை விஸ்தரிக்க 
குபோட்டா இயந்திரங்கள் கையளிப்பு!
                            
                               (அஸ்லம் எஸ்.மௌலானா)      

கல்முனை மாநகர சபையின் சுகாதார சேவைகளை விஸ்தரிப்பு செய்வதற்காக இரண்டு குபோட்டா இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதனைக் கையளிக்கும் நிகழ்வு இன்று 24 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை காலை கல்முனை மாநகர சபை வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்போது இந்த இரு குபோட்டா இயந்திரங்களையும் கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் எம்.சி.எம்.மாஹிரிடம் மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் உத்தியோகபூர்வமாக கையளித்தார்
இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்...மஜீத், முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாரூக் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கடந்த 2006ஆம் ஆண்டு தொடக்கம் கல்முனை மாநகர சபையின் பொறியியல் பிரிவில் பழுதடைந்து பாவனையில் ஈடுபடுத்தப்படாமல் இருந்து வந்த இந்த இரு குபோட்டாக்களும் முதல்வரின் ஆலோசனையின் பேரில் திருத்தம் செய்யப்பட்டு புதிய இயந்திரங்களாக மாற்றியமைக்கப்பட்டே சுகாதார திணைக்களத்திற்கு கையளிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனால் புதிதாக கொள்வனவு செய்வதற்குரிய மாநகர சபையின் பல லட்சம் ரூபா நிதி மீதப்படுத்தப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகிறது.
இதனை தனது கடின முயற்சியினால் குறைந்த செலவில் திருத்தம் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்த மாநகர சபை ஊழியர் ஆர்.அழகுராஜா இந்நிகழ்வின்போது முதல்வரினால் பரிசு வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

மாநகர சபையின் சுகாதார திணைக்களத்திற்கு இரண்டு குபோட்டாக்கள் கிடைத்திருப்பதன் மூலம் எமது மாநகர பிரதேசங்களில் திண்மக் கழிவகற்றல் பணிகள் உள்ளிட்ட சேவைகளை மேலும் சிறப்பாக முன்னெடுக்க முடியும் என்றும் இதற்கு நடவடிக்கை எடுத்து உதவிய மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பருக்கு  நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மாநகர சபையின் பிரதம சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் குறிப்பிட்டார்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top