கல்முனையில் முஸ்லிம்கள் ஏற்பாடு செய்த 'துஆ' பிரார்த்தனைக்கு நீதிமன்றத் தடை;
அநீதி எனச் சீறுகிறார் ஹரிஸ் எம்.பி !
-    கல்முனை மாநகரம்


பேருவளை, அளுத்கம மற்றும் தர்க்கா நகர் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக 'துஆ' பிரார்தனை நடத்துவதற்குமாக கல்முனையில் முஸ்லிம் வாழ்வுரிமைக்கான அமைப்பு இன்று புதனன்கிழமை ஏற்பாடு செய்த நிகழ்வை நீதிமன்றம் ஊடாகத் தடைசெய்தமைக்காக பொலிஸ் மா அதிபருக்கு எதிராகக் கடுமையான கண்டனத்தை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் வெளியிட்டிருக்கின்றார்.
24 ஆம் திகதி கண்டியில் சர்ச்சைக்குரிய பொதுபல சேனா இயக்கம் மனவுறுதிப்பூஜையொன்றை நடத்த பொலிஸ்மா அதிபர் அனுமதி வழங்கும் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக எமது இஸ்லாமிய முறையிலான 'துஆ' பிரார்த்தனையை புரிவதற்கு தடை விதித்தமைக்கு அரச உயர் மட்டங்களின் அழுத்தமே காரணம் எனவும் நாட்டில் நீதி மரணித்து விட்டது எனவும் ஹரீஸ் மேலும் தெரிவித்தார் .
வாக்கு வங்கியை இலக்காகக் கொண்டதே இந்த இனவாத செயற்பாடு. இதற்காகவே பொதுபல சேனா இந்த செயற்பாட்டில் இறங்கியுள்ளது. - என்றார் அவர். இவ்விடயம் தொடர்பாக பத்திரிகையாளருக்கு விளக்கம் அளிக்கும் அவரது செய்தியாளர் மாநாடு அவரின் சாய்ந்தமருது இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியவை வருமாறு:-
கடந்த 15 ஆம் திகதி நடந்தேறிய இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையில் நேரடியாக பொது பல சேனா இயக்கம் களத்தில் நின்றது. ஊரடங்குச் சட்டம் முஸ்லிம் மக்களைக் கட்டுப்படுத்தவே பிறப்பிக்கப்பட்டது. ஏனையவர்களுக்கு அது விதிவிலக்காக இருந்தது. அந்த வேளை முஸ்லிம்களின் உயிர், பொருள் அத்தனையும் வெறியாட்டம் ஆடப்பட்டன. இதற்கு பின்னணியாக அரசாங்கத்தின் உயர் நிலையில் உள்ளவர்கள் காணப்படுகின்றனர்.
இதனை எதிர்கால வாக்கு வங்கியை இலக்கு வைத்த தாக்குதலாகவே காணமுடிகின்றது. இத்தகைய துரதிஷ்டமான சம்பவங்கள் ஏனைய பிரதேச முஸ்லிம்களையும் குறி வைக்கப்படாத வகையில் எமது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டிய தேவையுள்ளது.
முஸ்லிம்களின் வலிமையை வெளிப்படுத்த அம்பாறை மாவட்டம்தான் மிகப் பொருத்தமானது. அதன் அடிப்படையில்தான் கல்முனையில் இந்த 'துஆ' பிரார்தனை நடை பெறவிருந்தது. உளவுப் பிரிவினரின் அறிக்கையின் பிரகாரம் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரினால் எமது பிரார்தனை நிகழ்வை தடை செய்யும் வகையில் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி வெளியிட்ட கருத்தினை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. முஸ்லிம்களுக்கு எதிராக எவர் அநியாயம் செய்தாலும் தட்டிக் கேட்போம். விடுதலைப் புலிகள் எம்மை தாக்கிய போது எமது தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவரது தலைமையில் பல எதிர்ப்பு போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளார் .
முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக சிவில் பாதுகாப்புக் குழுக்களையும், இந்திய படையுடன் இணைந்து சேவையாற்றும் முஸ்லிம் பாதுகாப்புக் குழுக்களையும் செயற்படுத்தினார். அதே போன்று இன்றைய தலைமைத்துவமும் - நாமும் - செயலில் இறங்கியுள்ளோம்.

தற்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்ச சூழலில் அரசின் நடவடிக்கைகளில் எமக்கு திருப்தியில்லை. முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலிருந்து 5000 பொலிஸாரை பதவிக்கமர்த்தி முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதற்காக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். - என்றார் -

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top