தேசிய ஷுறா சபை மற்றும் முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கத்தினரால்
பிரச்சினைகளை நிவர்த்தி செய்யக் கோரி
பிரச்சினைகளை நிவர்த்தி செய்யக் கோரி
பொலிஸ் மா அதிபருக்கு
வழங்கப்பட்ட கடிதம்
திரு. இலங்கக்கோன்
பொலிஸ் மாஅதிபர்,
பொலிஸ் தலைமையகம்,
கொழும்பு 01
பொலிஸ் மாஅதிபர் அவர்களுக்கு,
களுத்துறை மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகள் – 2014 ஜுன்
15
தேசிய ஷுறா சபை மற்றும் முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னெடுப்பின் பிரகாரம் சட்டத்தரணிகள் குழு ஒன்று 2014 ஜுன் 21 ஆம் திகதி சனிக்கிழமை இன வன்முறைகள் நடைபெற்ற அளுத்கமை, தர்கா நகர், பேருவலைமற்றும் வெலிப்பன்னை போன்ற இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு நிகழ்ந்த மரணங்கள், இழைக்கப்பட்ட குற்றவியல் தவறுகள், சொத்துகளுக்கு ஏற்படுத்தப்பட்டசேதங்கள் போன்றவற்றின் முதல்தர அறிக்கையைப் பெற்றனர். தங்கள் உடனடி நடவடிக்கைக்காக பின்வரும் அவசர முறையீடுகளை தங்களிடம் இத்தால் சமர்ப்பிப்பதற்கு விரும்புகின்றோம். மேலும் விபரமானமுறையீட்டை கூடிய விரைவில் தங்களிடம் சமர்ப்பிப்பதற்கும் எதிர்பார்க்கின்றோம்.
பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அச்சத்துடனும் மன அதிர்ச்சியுடனுமே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு சிலரைத் தவிர, பொரும்பாலானவர்கள் விபரமான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு விரும்பினாலும் கூட பொலிஸ் நிலையத்துக்கு சமூகமல்ப்பதற்குத் தயங்குகின்றனர். எனவே தர்கா நகர் பெரிய பள்ளிவாசல் வளாகம், பேருவலை நளீமிய்யா மற்றும் வெலிப்பன்னை ஜும்ஆ பள்ளிவாசல் ஆகிய இடங்கள் ஒவ்வொன்றிலும் ஆகக் குறைந்தது இரண்டு பொலிஸ் கருமபீடங்கள் வீதமேனும் உடனடியாகத் திறந்து முறைப்பாடுகளையும் நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களையும் பதிவு செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.
பல சந்தர்ப்பங்களில் உள்ளூர் பொலிஸ் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களின் மிகச் சுருக்கமான அறிக்கையைப் பெற்றுக்கொண்டதாகவும் அவை பெரும்பாலும் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பானவையாகும் எனவும் நாம் அறிகின்றோம். பாதிக்கப்பட்ட மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட தொடரான சம்பவங்களின் விபரங்களை வழங்குவதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படாததால் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட இந்த முறையில் இப்பிரதேச மக்கள் திருப்தியடையவில்லை என எமக்குத் தெரிவித்துள்ளனர்.
தமக்கு ஏற்படுத்தப்பட்ட மன அதிர்ச்சியிலிருந்து அந்த மக்கள் இன்னும் விடுபடாதுள்ளதால் அத்தகைய கூற்றுகள் முதல்தர முறைப்பாடுகளாகக் கருதப்படலாகாது என நாம் தங்களைக் கேட்டுக்கொள்கின்றோம். எனவே முறையானதும் விரிவானதுமான முதல்தர முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதை உறுதிசெய்து கொள்வதற்காக பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள கரும பீடத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு குறிப்பான அறிவுறுத்தல்களை வழங்குமாறு தங்களை வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம். பள்ளிவாசல்களும் ஏனைய உள்ளூர் நிறுவனங்களும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவர்.
வீடுகளையும் கடைகளையும் சேதப்படுத்துவதற்கு அல்லது தீக்கிரையாக்குவதற்கு முன்னர் நகைகள், பெறுமதி வாய்ந்த பொருட்கள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் என்பன பரவலாகக் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. பாதிக்கப்பட்டவர்கள் வழங்குவதற்குத் தயாராக உள்ள தகவல்களின் அடிப்படையில் மேற்படி கொள்ளையடிக்கப்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்களை மீளப் பெறுவதற்கு அவசர நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொள்ளுதல் வேண்டும். இற்றைவரை கொள்ளையிடப்பட்ட பெறுமதிவாய்ந்த பொருட்களை மீளப் பெற்றுக்கொடுத்தல் தொடர்பாக பொலிசார் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. எனவே களவாடப்பட்ட பொருட்களை மீளப்பெறுவதற்கு தங்களின் கண்டிப்பான அறிவுறுத்தல்கள் அவசியமாகின்றன.
குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையின் பிரிவுகள் 109 மற்றும் 110(1) ஆகியவற்றின் மீது பொலிசாரின் கவனத்தை தாங்கள் ஈர்த்து, பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளுக்கு அவர்களின் முறைப்பாடுகளை எழுத்தில் தருவதற்கும் அவற்றை பொலிஸ் முறைப்பாட்டுப் புத்தகத்தில் முறையாகப் பதிவு செய்யவும் வழிவகைகள் செய்து தருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
பாதிக்கப்பட்ட மக்களை மதிப்பிட்டு அவர்களை அறுதல்ப்படுத்துவதற்கு தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி எமக்கு அறியத்தருவீர்கள் என நாம் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.
தங்கள் உண்மையுள்ள,
இஸ்மாயில் ஏ. அஸீஸ்
பொதுச்செயலாளர்
தேசிய ஷூறா சபை
தமிழாக்கம்: ஏ.எச்.சித்தீக்காரியப்பர்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.