எமது நோன்புகால வணக்கங்களை பிறமதத்தவர்களுக்கு

தொந்தரவை ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ளவேண்டும்.

(மக்கள் நண்பன் சம்மாந்துறை அன்சார்)


நோன்பு காலம் வந்து விட்டாலே முஸ்லிம் பிரிவினைவாதிகளுக்கிடையில் பிறை பார்ப்பதிலிருந்து தராவீஹ தொழுகை, பெருநாள் கொண்டாட்டம் வரை பிரச்சினைகள் வந்து கொண்டேதான் இருக்கும். அவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் முஸ்லிம் சகோதரர்களுக்கு மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்துவது போல் பிற மத சகோதரர்களுக்கும் இடையில் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன.
இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றைய கால சூழ்நிலையில் நாம் செய்யும் எந்தக் காரியங்களும் பிற மதத்தவர்களை எந்த வகையிலும் அசௌகரியங்களுக்கு உட்படுத்தா வண்ணம் செய்து கொள்ள வேண்டும் அது வணக்க வழிபாடுகளாக இருந்தாலும் சரியே.
நோன்பு காலங்களில் தராவீஹ் தொழுகை 8 ரக்கஅத் என்போர் 8 ரக்கஅத் தொழுது கொள்ளுங்கள் 21 என்போர் 21 ரக்கஅத் தொழுது கொள்ளுங்கள் தயவு செய்து உங்களுக்குல் வாக்குவாதங்களையும், சண்டைகளையும் ஏற்படுத்திக் கொண்டு பிற மதத்தவர்களுக்கும் சஞ்சலத்தை உண்டு பண்ணி அவர்கள் காரித் துப்பும் படி செய்து விட வேண்டாம்.
மேலும் நோன்பு காலம் வணக்க வழிபாடுகளை அதிகப்படுத்தும் காலம் என்பதால் இஷா தொழுகையில் இருந்து தராவீஹ் தொழுகையில் ஆரம்பித்து சுமார் இரண்டு, மூன்று மணி நேரம் வரை வணக்கவழிபாடுகளில் ஓதல், தொழுகை, மார்க்க சொற்பொழிவு, (துஆ) பிரார்த்தனை என்று ஒலி பெருக்கிகள் துணையோடு நாம் ஈடுபடுவோம், இது பிற மதத்தவர்களும் ஒன்றாக வாழும் பிரதேசங்களில் அவர்களுக்கு தொந்தரவாக அமையும் அந்த சூழ்நிலையில் ஒலி பெருக்கியின் தேவையைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
தராவீஹ் தொழுகை முடிந்தவுடம் ஆண்கள் சந்திகளில் கூடிக் கூடி கதைத்துக் கொண்டு அவ்விடத்தில் கூட்டமாக நிற்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
நோன்புகால மார்க்க சொற்பொழிவுகளை நடாத்தும் போது உங்கள் பேச்சுக்கள் ஆக்ரோசமானதாகவும், ஆவேசமானதாகவும், உரத்த தொனியிலும் அல்லாமல் அமைதியான, சாந்தமான முறையில் பிற மதத்தையும், மதத்தினரையும் நிந்தனை செய்யாது பார்த்துக் கொள்ளுங்கள்.
பெண்கள் பள்ளிவாசல்களுக்கு சென்றுதான் தராவீஹ் தொழ வேண்டும் என்ற ஒரு கட்டாயத் தேவைப்பாடு ஒன்றும் இல்லை முடிந்தவர்கள் தொழுது கொள்ளுங்ள் முடியாதவர்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள். தராவீஹ் தொழச் செல்கின்றோம் என்ற பெயரில் வீதிகளில் உலாவித் திரிய வேண்டாம்.
சிங்கள, தமிழ் சகோதரர்கள் வாழும் பிரதேசங்களில் அண்மை அண்மையில் அதிகளவான பள்ளிவாசல்கள் இருந்தால் அதில் எல்லாப் பள்ளிவாசல்களிலும் ஒலி பெருக்கி மூலம் அதான் சொல்ல வேண்டும் என்ற அவசியம் ஒன்றும் கிடையாது மாறாக ஒரு பள்ளிவாசலில் அல்லது இரு பள்ளிவாசலில் சொன்னால் போதும். அதுவல்லாது எல்லாப் பள்ளிவாசல்களிலும் அதான் ஒலி பெருக்கி மூலம் ஒலித்துக் கொண்டிருந்தால் அது பிறமதத்தவர்களுக்கு தொந்தரவாக அமையும்.
ஆகவே சகோதரர்களே..!!! இந்த ரமழான் காலத்தில் ஒழுக்க நெறிகளைப் பேணி எமது வணக்க வழிபாடுகளால் பிற மதத்தினருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாது இருப்போம் இன்ஷா அல்லாஹ்.
இஸ்லாம் ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்ட மார்க்கம் என்பதை மறந்து விட வேண்டாம்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top