நோன்பு இறையச்சத்தை அடைவதற்குரிய

ஒரு சாதனமாகும்


-    றிப்கா காசீம்






"நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது 

கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது 

கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவராக 

ஆகலாம்." [அல்குர்ஆன் 2:183]

நோன்பு இறையச்சத்தை அடைவதற்குரிய ஒரு சாதனமாகும். இறையச்சம் என்பது அல்லாஹ் அனுமதித்தவற்றைச் செய்வதும், அவன் தடை செய்தவற்றை விட்டு விலகிக் கொள்வதுமாகும். ஒருவர் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியும், அவனது தண்டனைக்குப் பயந்தும் வாழ்கிற போதுதான் அவருக்குத் தடுக்கப்பட்ட காரியங்களை விட்டு விலகுவது எளிதாக அமையும். நோன்பு மனஇச்சைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், பாவங்களை விட்டு தவிர்ந்திருப்பதற்க்கும் நமக்குப் பயிற்சி அளிக்கிறது. மனிதன் தனது தீய குணங்களை விட்டு விலகிக் கொள்ள உதவுகிறது. ஆகவே, ஒரு நோன்பாளி கட்டாயம் தமது தீய செயல்களையும் பேச்சுக்களையும் விட்டுவிட வேண்டும்.
நபி(ஸல்) கூறினார்கள்: "யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையுமில்லை!" (அபூஹுரைரா (ரலி), ஸஹீஹுல் புகாரி)
நபி(ஸல்) மேலும் கூறினார்கள்: "உண்ணுதல், பருகுதலை விட்டுவிடுவது மட்டும் நோன்பல்ல, மாறாக, வீணான பேச்சையும் அருவருப்பான வார்த்தைகளையும் விட்டுவிடுவதே நோன்பு. உங்களில் ஒருவர் தீய வார்த்தைகளால் தூற்றப்பட்டால், கோபமூட்டப்பட்டால் 'நான் நோன்பாளி' என்று கூறிவிடட்டும்." (அல்பைஹகீ - ஸஹீஹ்)

வீணான பேச்சு (லஹ்வ்) என்பது உண்மைக்குப் புறம்பான, முட்டாள்தனமான எல்லா விஷயங்களையும் குறிக்கும். வானொலி(Radio) மற்றும் தொலைக்காட்சி(TV) நிகழ்சிகளை கண்டுகளித்து நேரங்களை வீணடிப்பது, கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுவது, காதல் கதை நாவல்களைப் படிப்பது, நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருப்பது, புறம், அவதூறு, பரிகசிப்பு இன்னும் இவை போன்றவை அனைத்தும் அடங்கும். இவற்றைக் கண்டிப்பாக நாம் தவிர்த்திடல் வேண்டும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top