உலகக் கிண்ண பயிற்சி ஆட்டத்தில்
இங்கிலாந்தை வீழ்த்தியது  பாகிஸ்தான்

இன்று சிட்னியில் நடைபெற்ற உலகக்கிண்ண பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் முதலில் துடுப்பெடுத்தாட , இங்கிலாந்து அணி பாகிஸ்தானின் இறுக்கமான பந்துவீச்சில் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 250 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் 78/4 என்று திணறிய போது கேப்டன் மிஸ்பா உல் ஹக் (91 ஓட்டங்கள், 99 பந்து, 5 பவுண்டரி 2 சிக்சர்), உமர் அக்மல் (65 ஓட்டங்கள், 66 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) முக்கியக் கூட்டணி அமைக்க, 48.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தரப்பில்  கேப்டன் மிஸ்பா உல் ஹக் 91 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, தொடக்கத்தில் சொஹைல் கான், ஈஷான் ஆதில் ஆகியோரது துல்லியமான, குட் லெந்த் பந்துவீச்சில் விரைவு ஓட்டங்களைக் குவிக்க முடியவில்லை.
2-வது ஓவரில் ஈஷான் ஆதில் பந்தை மொயீன் அலி லெக் திசையில் திருப்பி விட நினைத்தார். ஆனால் மட்டையை சற்றே முன்னதாக திருப்ப பந்து மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு ஷாட் கவரில் எளிதான கேட்சை யூனிஸ் கான் பிடிக்க 4 ஓட்டங்களில் வெளியேறினார்.
அதன் பிறகு கேரி பாலன்ஸ் களமிறங்கி 15 பந்துகளில் 1 ஓட்டத்தையே எடுக்க முடிந்தது. ஆனால் அவர் பதட்டமடையவில்லை. அவர் 81 பந்துகளில் 57 ஓட்டங்களை 4 பவுண்டரிகளுடன் எடுத்து நிலைப்படுத்தினார். அதிரடிக்காக இறக்கி விடப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸும் துல்லியமான பந்து வீச்சை அடித்து ஆட முடியவில்லை. அவரும் முயற்சி செய்யவில்லை. கடைசியில் அவர் 47 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்து ஷாகித் அஃப்ரீடி பந்தில் ஆட்டமிழந்தார்.
ஹேல்ஸும், பேலன்சும் 2-வது விக்கெட்டுக்காக 64 ஓட்டங்களைச் சேர்க்க, பேலன்சும், ஜோ ரூட்டும் இணைந்து 66 ஓட்டங்களை 3-வது விக்கெட்டுக்காக 12 ஓவர்களில் சேர்த்தனர்.
பேலன்ஸை 57 ஓட்டங்களில் யாசிர் ஷா என்ற லெக்ஸ்பின்னர் வீழ்த்த, கேப்டன் மோர்கனின் மோசமான பார்ம் தொடர்ந்தது. அதே ஓவரின் 4-வது பந்தில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். பிறகு பொபாராவையும் (11) யாசிர் ஷா வீழ்த்த இங்கிலாந்து 35-வது ஓவர் முடிவில் 157/5 என்று சரிவின் விளிம்பில் இருந்தது.
ஜோஸ் பட்லர் 13 ஓட்டங்களில் சோஹைல் கான் பந்தில் பவுல்டு ஆனார். ஆனால் அதன் பிறகு ரூட், கிறிஸ் ஜோர்டான் இணைந்து 8 ஓவர்களில் 64 ஓட்டங்களை 7-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ஜோ ரூட் 89 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 85 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார். இங்கிலாந்து 250 ஓட்டங்களை ஒருவழியாகச் சேர்த்தது.

பாகிஸ்தான் தரப்பில் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று இங்கிலாந்து மிடில் ஆர்டரை வெளியேற்றினார். அப்ரீடி தொடக்கத்தில் சிக்கனமாக வீசினாலும் பின்னர் ஓட்டங்களை கசியவிட்டு 59 ஓட்டங்களைக் கொடுத்தார்.
இலக்கைத் துரத்தக் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன்,  பிராடின் வேகம் மற்றும் ஸ்விங்கிற்குத் தடுமாறினர். நசீர் ஜாம்ஷெட் 1 ஓட்டம்எடுத்து பிராடின் வைடு பந்தை கால்களை நகர்த்தாமல் விளையாடி எட்ஜ் செய்து டிரெட்வெல்லிடம் 2-வது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்த படியாக அகமது ஷேஜாத் 2 ஓட்டங்களில் இருந்த போது ஆண்டர்சனின் கிளாசிக் அவுட் ஸ்விங்கருக்கு ஷேஜாத் வழக்கமான பாணியில் தொட அது மீண்டும் டிரெட்வெல்லிடம் கேட்ச் ஆனது.
யூனிஸ் கான் 40 பந்துகள் விளையாடி 2 பவுண்டரிகளுடன் 19 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜோர்டான் வீசிய ஷாட் பிட்ச் பந்தை புல் ஷாட் ஆடி கேரி பாலன்ஸின் அபார கேட்சிற்கு அவுட் ஆக, பாகிஸ்தான் 14-வது ஓவரில் 43/3 என்று ஆனது. அதன் பிறகு ஹாரிஸ் சோஹைல், மிஸ்பா இணைந்து ஸ்கோரை மெதுவே 78 ஓட்டங்களுக்கு உயர்த்தினர், இதில் ஹாரிஸ் சோஹைல் 33 ஓட்டங்கள் எடுத்து டிரெட்வெல் ஆஃப் ஸ்பின்னை லாங் ஆனில் நேராக கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பிறகு உமர் அக்மல், மிஸ்பாவுடன் இணைந்து 22 ஓவர்களில் 133 ஓட்டங்களைச் சேர்த்தனர். உமர் அக்மல் 65 ஓட்டங்களில் வெளியேற ஸ்கோர் 211/5 என்று எட்டியது. சோஹைப் மக்சூத் 20 ஓட்டங்கள் எடுக்க மிஸ்பா ஒரு கேப்டனுக்கான பொறுப்பும், நிதானமும் காண்பித்து அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

14 அணிகள் பங்கேற்கும் 11–வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்துகின்றன. எதிர் வரும்  14 ஆம் திகதி  அதிரடி திருவிழா ஆரம்பிக்கிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top